மேற்குவங்கத்தில் ஆம்பன் புயலால் இதுவரை 72  பேர் உயிரிழந்துள்ளதாக  முதல்வர்  மம்தா பானர்ஜி தகவல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான உம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் நேற்று பிற்பகலில் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. புயல் பிற்பகல் 2.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய நிலையில் கரையை கடந்து முடிக்க 4 மணிநேரத்திற்கும் அதிகமானது. மேற்குவங்கத்தின் கடல் பகுதி மட்டுமின்றி வங்கதேசத்தின் கடல் பகுதி வழியாகவும் உம்பன் புயல் கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு 150-165 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

சக்திமிக்க ஆம்பன் புயல் ஆயிரக்கணக்கான வீடுகளை சிதைத்து விட்டது. மரங்கள், மின் கம்பங்கள் உள்ளிட்டவை அடியோடு சாய்ந்துள்ளன. கனமழை காரணமாக கொல்கத்தா விமான நிலையத்தில் மழை நீர் சூழ்ந்ததால். விமான நிலையம் மூடப்பட்டது. கொல்கத்தா உள்ளிட்ட பல மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில் புயல் காரணமாக 72 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.  5 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பாதிப்பு குறித்து கணக்கெடுத்து வருகிறோம். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2.5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.