மும்பை சென்ற எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் காற்றழுத்தம் குறைந்ததால் 7 பயணிகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்ட்டது. அந்த விமானம் அவசரமாக தரையிறங்கியது.
Ethiopian Airlines Flight Makes Emergency Landing In Mumbai: எத்தியோப்பியா நாட்டின் அடிஸ் அபாபாவிலிருந்து மும்பைக்குச் சென்ற எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏழு பேருக்கு உடல்நிலைக் குறைவு ஏற்பட்டதால் நகரின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் (CSMIA) அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஊடக அறிக்கைகளின்படி, போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் நடுவானில் பறந்தபோது காற்றழுத்த தாழ்வு நிலையை சந்தித்த பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்தது. விமானம் அரபிக் கடலுக்கு மேலே 33,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது பிரச்சினை தொடங்கியது.
அவசரமாக தரையிறங்கிய விமானம்
FlightRadar24 தரவுகளின்படி விமானத்தின் கேபினில் காற்றழுத்தம் குறைந்ததால் விமானம் அதிகாலை 1:42 மணிக்கு அவசரமாக தரையிறங்கியது. தரையிறங்கியதும், ஏழு பயணிகள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தனர். அதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. ''விமானம் தரையிறங்கியதும், டிகம்பரஷ்ஷன் தொடர்பான அறிகுறிகளுக்காக ஏழு பயணிகளுக்கு விமான நிலைய மருத்துவக் குழு சிகிச்சை அளித்தது, அவர்களில் ஒருவருக்கு மருத்துவமனையில் அனுமதி தேவைப்பட்டது” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி கூறியுள்ளது.
ஏர் இந்தியா விமானத்திலும் இந்த சம்பவம்
சில நாட்களுக்கு முன்பு இதேபோல் ஒரு சம்பவம் நடந்தது. அதாவது லண்டனில் இருந்து மும்பைக்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இருந்த பணியாளர்கள் மற்றும் ஐந்து பயணிகள் நோய்வாய்ப்பட்டனர். AI 130 விமானத்தில் இருந்த பயணிகள் குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் உள்ளிட்ட புட் பாய்சன் அறிகுறிகளை உணரத் தொடங்கினர். விமான நிறுவனமும் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியது, ஐந்து பயணிகள் மற்றும் விமானத்தில் இருந்த இரண்டு பணியாளர்கள் நோய்வாய்ப்பட்டதாகக் கூறியது.
விமான கேபினில் காற்றழுத்தம் குறைந்ததே காரணம்
பயணிகள் மற்றும் பணியாளர்களில் இருவர் தரையிறங்கும் வரை தொடர்ந்து அறிகுறிகளை உணர்ந்தனர், விமானம் தரையிறங்கிய பிறகு மருத்துவ சிகிச்சை பெற்றனர். பின்னர் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். பயணிகள் உடல்நலக்குறைவுக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது. அதே நேரத்தில் பெயர் வெளியிட விரும்பாத ஒரு விமான நிறுவன அதிகாரி, 'கேபின் அழுத்தம் படிப்படியாகக் குறைவது அல்லது மெதுவான அழுத்தம் குறைவது இதுபோன்ற உடல் உபாதைகளுக்கு காரணமாக இருக்கலாம்' என்று கூறினார்.
ஏர் இந்தியா விமான விபத்து
இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா விசாரித்து வருவதாகவும், இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சில வாரங்களுக்கு முன்பு அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே மருத்துவக் கல்லூரி கட்டடம் மீது விழுந்து வெடித்து சிதறியது. இதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உள்பட 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
அதிரடி சோதனை நடத்திய DGCA
இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு, நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் திடீர் கண்காணிப்பு சோதனைகளை DGCA நடத்தியது. அப்போது பல பாதுகாப்பு மீறல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. பின்னர் ஒழுங்குமுறை ஆணையம் விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு ஒரு வாரத்திற்குள் பிரச்சினைகளைத் தீர்க்க சரியான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
