திடீரென சொத்துக்கள் அதிகரிப்பு தொடர்பாக மக்களவை எம்.பி.க்கள் 7 பேர், பல்வேறு மாநிலங்களின் 98 எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரின் சொத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் உச்ச நீதிமன்றத்தில் இன்று விளக்கம் அளித்துள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் , எம்.பி.க்கள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், அவர்களின் சொத்துக்கள் திடீரென உயர்ந்துவிடுகிறது. அடுத்த தேர்தலில் போட்டியிடும் போது, முந்தைய தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்ட சொத்துக்களை கணக்கிட்டால், கணிசமாக சொத்துக்களின் மதிப்பு உயர்ந்துள்ளது. இது குறித்து எம்.எல்.ஏ., எம்.பி.க்களிடம் தேர்தல் ஆணையமோ, வருமான வரித்துறையோ விசாரணை ஏதும் நடத்துவதில்லை.

நாட்டில் தற்போது 26 மக்களவை எம்.பி.க்கள், 11 மாநிலங்கள் அவை எம்.பி.க்கள், 256 எம்.எல்.ஏக்கள் சொத்துக்கள் மிகக்குறுகிய காலத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது  என்று லக்னோவைச் சேர்ந்த லோக் பிரகாரி என்ற தனியார் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தது.

அந்த மனுவை நீதிபதி செலமேஸ்மர் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, மத்திய சொலிட்டர் ஜெனரல் நரசிம்மாவிடம் பேசிய நீதிபதி செலமேஸ்வர், “ அளவுக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்க்கும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு ஏதேனும் திட்டம் வைத்து இருக்கிறதா?,  ஒரு புறம் தேர்தல் சீர்திருத்தத்தை பேசிக்கொண்டு மறுபுறம் இப்படி நடக்கிறது. 

இதுதான் மத்திய அரசின் அனுகுமுறையா?, இதுவரை அளவுக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் குறித்த பட்டியல் வைத்து இருக்கிறீர்களா . இருந்தால், நீதிமன்றத்தில் வருமானவரித்துறை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த மனு இன்று நீதிபதி செலமேஸ்வர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய நேரடி வரிகள் வாரியம் சீல் வைக்கப்பட்ட கவரில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை செவ்வாய்கிழமை அளிப்போம் என உறுதி அளிக்கப்பட்டது.  

மேலும், குறுகிய காலத்தில் சொத்துக்களை கணிசமாக சேர்த்த வகையில் 7 மக்களவை எம்.பி.க்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 98 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். மேலும், 42 எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த 7 எம்.பி., 98 எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்கள் குறித்து வருமானவரித்துறை விசாரணை நடத்த தொடங்கிவிட்டனர்.

 மேலும், 11 மக்களவை எம்.பி.க்கள், 11 மாநிலங்கள் அவை எம்.பி.க்கள், 42 எம்.எல்.ஏ.க்கள் சொத்துக்களின் மதிப்பு முதல்கட்டமாக மதிப்பிடப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டன என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

.