கடந்த மாதம் 19ஆம் தேதியன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தால் 61 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்ட பகுதியில் ரயில் பாதை அருகே தசரா பண்டிகை விழா கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது அங்கு ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர். அப்போது அந்த இருப்புப் பாதையில் ரயில் வந்தபொழுது மோசமான விபத்து ஏற்பட்டு 61 நபர்கள் பலியாகினர். இந்த சம்பவத்தால் பஞ்சாப் மாநிலமே சோகத்தில் ஆழ்ந்தது. அக்டோபர் 20ஆம் தேதியன்று பஞ்சாப் மாநிலம் முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டது.

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சத்தை அம்மாநில அரசு அறிவித்தது. மத்திய அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்த விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் விசாரணை நடத்தினார். அவரது விசாரணை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. ரயில் விபத்துக்கு மக்களின் அலட்சியமே காரணம் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ரயில்வேத் துறையின் தவறு ஏதும் இல்லை எனவும், இருப்புப் பாதை அருகே பண்டிகைக் கொண்டாடப்படுவதாக ரயில்வே அதிகாரிகளிடம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோ, உள்ளூர் நிர்வாகமோ தெரிவிக்கவில்லை எனவும் இந்த அறிக்கை கூறுகிறது. விபத்து நடைபெற்ற இடம் அருகே இருப்புப் பாதை வளைவு இருப்பதால் ரயில் 250 மீட்டர் தொலைவில் வரும்வரை பண்டிகைக் கொண்டாடப்படுவது தெரியவில்லை. 

மேலும், பட்டாசுகளும், ராவணனின் உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டதால் புகை சூழ்ந்திருந்துள்ளது. அப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட ரயில் வேகம் மணிக்கு 100 கிலோமீட்டராகும். விபத்து நடைபெற்றபோது ரயில் மணிக்கு 82 கிலோமீட்டர் வேகத்தில் வந்துள்ளதாக இந்த விசாரணை அறிக்கை கூறுகிறது.