girl child sexually assaulted and killed in haryana
இந்தியாவில் சிறுமிகளின் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
உனா, கத்துவா சம்பவங்கள் தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பின. இந்த சம்பவங்களுக்கு பிறகு, பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன.
இதையடுத்து 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் போக்ஸோ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
ஹரியானா மாநிலம் யமுனாநகர் மாவட்டத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள கிஸ்ராபாத் பகுதியில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் அமைச்சருமான நிர்மல் சிங்கிற்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீட்டில் காவலாளியாக வேலை செய்துவருபவரின் 6 வயது மகள் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சிறுமி.
முன்னாள் அமைச்சரின் பண்ணை வீட்டிற்கு அருகில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருவதாக யமுனாநகர் எஸ்பி ராஜேஷ் கலியா தெரிவித்துள்ளார்.
