கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுத்து, எதிர்கால பொருளாரத்தை கட்டமைப்பதற்காக, உள்நாட்டு உற்பத்தி, வணிகத்தை மேம்படுத்தும் வகையில், சுயசார்பு பாரதம் என்ற திட்டத்திற்கு ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாகவும், அதுகுறித்த விரிவான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிடுவார் என்றும் பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார். 

அதன்படி, சுயசார்பு பாரதம் திட்டத்தில் 15 அறிவிப்புகளை மட்டும் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில் 6 அறிவிப்புகள் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கானது. 

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான அறிவிப்புகள்:

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் எந்தவிதமான அடமானமும் வைக்காமல் வங்கிக்கடன் பெறலாம். அதற்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 45 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும்.

ரூ.100 கோடி அளவுக்கு வியாபாரம் செய்யும் சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.25 கோடி மட்டுமே பழைய கடன் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் அந்த சிறு, குறு நிறுவனங்கள் இந்த கடனுதவியை பெற முடியும். 

20 ஆயிரம் கோடி ரூபாய் நலிவடைந்த சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு  துணைக்கடனாக வழங்கப்படும். 

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பில் தளர்வுகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, குறுந்தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.25 லட்சத்திலிருந்து ஒரு கோடியாகவும், நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

நிதிக்குள் நிதி என்கிற அடிப்படையில், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி மூலதன நிதி வழங்கப்படும். 

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கடன் திட்டத்தில் முதல் ஓராண்டுக்கு திருப்பி செலுத்த தேவையில்லை. 4 ஆண்டுகளில் இந்த கடனை திருப்பி செலுத்தலாம்.