5th standard Student attempts suicide
உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் நகரில் ஆசிரியை கடுமையாக தண்டனை கொடுத்ததையடுத்து, கடிதம் எழுதி வைத்து 5-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தண்டனை
கோரக்பூர் புனித அந்தோனி கான்வென்ட் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த 11 வயதுமாணவர் நவநீத் பிரகாஷ். இந்நிலையில், கடந்த 15-ந்தேதி அந்த மாணவர் பாடம் படிக்காத காரணத்தால் வகுப்பு ஆசிரியை தண்டனை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த மாணவர் விஷம் குடித்து நேற்று முன் தினம் பி.ஆர்.டி. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கடிதம்
இந்நிலையில், அந்த மாணவரின் ஸ்கூல் பேக்கில் ஒரு கடிதம் இருந்ததை அந்த மாணவரின் தந்தை எடுத்துள்ளார். அந்த கடிதத்தில் மாணவர் நவநீத் தனது ஆசிரியை அளித்த தண்டனையை சுட்டிக் காட்டி தான் தற்கொலை செய்து கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
கடுமையான தண்டனை வேண்டாம்
அந்த கடிதத்தில், “ அப்பா, இன்று என்னுடைய முதல் தேர்வு. ஆனால், என்னுடைய வகுப்பு ஆசிரியை என்னை காலை 9.15 மணி வரை நிற்க வைத்து அழ வைத்தார். 3 வகுப்புகள் நான் நின்று கொண்டே இருந்தேன். ஆனால், அவர் பாடம் நடத்துவதிலேயே கவனமாக இருந்தார். அதனால், நான் எனது வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன். இதுபோன்ற கடுமையான தண்டனையை இனிமேல் மாணவர்களுக்கு அளிக்க வேண்டாம் என எனது ஆசிரியையிடம் கேட்டுக்கொள்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த கடிதத்தை ஆதாரமாக வைத்து நவநீத்தின் தந்தை போலீசில் புகார் செய்தார். மேலும், தனது மகனின் சாவுக்கு பள்ளி நிர்வாகத்தின் மெத்தனமான போக்கே காரணம் என குற்றம்சாட்டினார்.
கைது
இதையடுத்து, சாகப்பூர் போலீஸ் நிலையம் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கு தூண்டிய குற்றத்தின் அடிப்படையில் ஆசிரியை பாவனாவை கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் எஸ்.பி. வினய் குமார் கூறுகையில், “ மாணவர்நவநீத்தை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியை பாவனாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். அந்த மாணவர் ஸ்கூல்பேக்கை பிரித்துப் பார்த்தபோது, அதில் உள்ள பிளாஸ்டிக் பேக்கில் இந்த கடிதம் இருந்துள்ளதாக மாணவரின் பெற்றோர் கொடுத்தனர். அந்த மாணவர் விஷம் குடித்துதான் தற்கொலை செய்துள்ளார் என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
Attachments
