பாஐகவுக்கு சிவசேனா எச்சரிக்கை யாரும் இங்கே புனிதர் கிடையாது. எங்களை கட்டாயப்படுத்தாதீங்க என பா.ஜ.க.வுக்கு சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் எதிர்பார்த்த மாதிரி பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களை காட்டிலும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனையடுத்து பா.ஜ.க. ஆட்சியை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், முதல்வர் பதவியை எங்களுக்கு 2.5 ஆண்டுகள் விட்டு தருவதாக எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி கொடுத்தால்தான் ஆதரவு அளிப்போம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அதிரடியாக தெரிவித்தார்.

ஆனால் முதல்வர் பதவியை விட்டு கொடுப்பதில் பா.ஜ.க. விருப்பம் இல்லை. இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி இருந்து வருகிறது. இந்நிலையில், சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவுத் முன்னணி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாங்கள் பா.ஜ.க.வின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று உத்தவ் தாக்கரே தெளிவாக கூறிவிட்டார்.

மாற்றுவழிகள் குறித்து சிந்திக்க எங்களை கட்டாயப்படுத்த வேண்டாம். சாத்தியக்கூறுகள் (காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆதரவு பெறுவது) குறித்து நாங்கள் மறுக்கவில்லை. அரசியலில் யாரும் புனிதர் இல்லை. இருப்பினும் கூட்டணி புனிதத்தை சேனா இன்னும் நம்புகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு தனது மகன் ஆத்தியா தாக்கரேவை முதல்வர் பதவியில் அமர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதன் காரணமாகத்தான் 2.5 ஆண்டுகள் முதல்வர் பதவி வேண்டும் என அவர் அடம்பிடிப்பதாக தகவல்.