ராஜஸ்தானில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் 15 அடி ஆழத்தில் 5 வயது சிறுவன் விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிறுமியை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் இரண்டு வயது சிறுவன் சுஜித் சமீபத்தில் ஆள்துளை கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் தமிழக மக்களை பெரும் துயரத்திற்கு ஆளாக்கியது. இந்த சம்பவத்தை அடுத்து உடனடியாக மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் அனைத்தையும் மூட வேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. 

சுஜித் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக பல ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன. இது தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணியும் கண்ணீர் மல்க பேசினார். தொழில்நுட்பத்தில் பெரும் வளர்ச்சி கொண்ட நாடு என இந்தியாவை போற்றுபவர்கள் மத்தியில் சுஜித்தின் மரணம் தலைகுனிவை ஏற்படுத்தியது என்றார்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் 5 வயது சிறுவன் தனது வீட்டிற்கு அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். இதனையடுத்து, சிறுவனின் அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் உடனே  காவல்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் 15 அடி ஆழத்தில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 15 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றின் அருகே பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. சிறுவனுக்கு ஆக்சிஜனும் அளிக்கப்பட்டு வருகிறது.