5 transgenders passed in neet exam

மருத்துவக் கல்விப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வில் இந்த ஆண்டு திருநங்கைகள் 8 பேர் தேர்வு எழுதி அதில், 5 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நுழைவு மற்றும் தகுதி தேர்வான நீட் தேர்வு மே 7ம் தேதி நாடு முழுவதும் நடந்தது. இதில் 10.90 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமாக கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாகவும், அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் மாணவர்கள் சிலர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளையும், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து சிபிஎஸ்இசார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என அனுமதி அளித்தது. இதையடுத்து, நீட் தேர்வு முடிவுகள் நாடுமுழுவதும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் நீட் தேர்வில் கலந்து கொண்டு 8 திருநங்கைகள் தேர்வு எழுதினர். இதில் 5 பேர் வெற்றி பெற்று மருத்துவப்படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுஇதுபோல், 9 திருநங்கைகள் தேர்வு எழுதினர், அதில் 3 மட்டுமே தகுதிபெற்று இருந்தனர்.

கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, மூன்றாம் பாலினம் என்று உருவாக்கி அதற்கு வேலைவாய்ப்பு,கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டது. இதனால், இந்த ஆண்டு திருநங்கைகள் தங்களின் மூன்றாம் பாலினப்பிரிவில் தேர்வு எழுதினர்.

2014ம் ஆண்டுக்கு முன் திருநங்கைகள் ஆண் மற்றும் பெண் பாலினத்தில் எழுதுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு மொத்தம் 10 லட்சத்து 90 ஆயிரத்து 85 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். அதில் 6 லட்சத்து11 ஆயிரத்து 539 பேர் தகுதி பெற்றனர். இதில் மாணவர்கள் தரப்பில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 221 பேர் தகுதிபெற்றனர், 3 லட்சத்து 45 ஆயிரத்து 313 மாணவிகள் தகுதி பெற்றனர்.