பிரதமர் மோடி, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்கள்பயணம் செய்த வகையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மோடி அரசு ரூ.451.75 கோடியை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆர்.டி.ஐ. மனு

மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஓய்வு பெற்ற அதிகாரி லோக்கஷ் பத்ரா என்பவர், தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் மூலம் பல்வேறு அமைச்சகங்கள் விமானப்போக்குவரத்து அமைச்சகத்துக்கு வைத்துள்ள நிலுவை குறித்து கேட்டு இருந்தார். அதில் பல தகவல்கள் வௌியாகியுள்ளன.

ரூ.451 கோடி

இதில் 2017ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை பிரதமர் மோடி, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத்தலைவர் ஹமீதுஅன்சாரி உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்கள், ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த வகையில், ரூ.451.75 கோடி தொகையை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர்.  இந்த வி.வி.ஐ.பி.கள் பயணம் செய்வதற்காகவே போயிங் 747-400 ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றை இயக்கவும், பராமரிக்கவும் அதிகமான செலவு ஆகிறது.

31 கடிதம்

இதில் மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதிராஜூ இந்த தொகையை செலுத்தக் கோரி கடந்த 2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டுவரை 31 கடிதங்களை பல்வேறு அமைச்சகங்களுக்கு எழுதியுள்ளார்.

மோடி பயணம்

இதில் அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகள், உஸ்பெகிஸ்தான், வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு 2016 நவம்பர் 9-முதல் 2017 பிப்ரவரி 10 வரை பிரதமர மோடி பயணம் செய்தவகையில், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.47.37 கோடி பாக்கி இருக்கிறது.

அன்சாரி

குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி 2008 ஜூன் முதல் 2017 மார்ச் 18 வரை 22 நாடுகளுக்கு பயணம் செய்தவகையில், ரூ.206.19 கோடி நிலுவை உள்ளது.

மேலும், போயிங் ரக விமானங்களை பராமரிக்க 2013 முதல் 2016ம் ஆண்டுவரை ரூ.145.63 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஹமீதுஅன்சாரிக்கான இந்த விமானத்துக்கான செலவுத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை.

வௌியுறவுதுறை

மேலும், கடந்த 2005 முதல் ஈராக், மால்டா, கெய்ரோ ஆகிய நாடுகளில் இருந்தும், அமெரிக்காவில் காத்தரீனா புயல் வந்தபோதும் இந்தியர்களை ஏர் இந்தியா நிறுவனம் மீட்டதில்வௌியுறவுத்துறை அமைச்சகம் ரூ.23.57 கோடி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு பாக்கி வைத்துள்ளது.

பிரணாப்

கடந்த 2008 முதல் 2016 செப்டம்பர் வரை குடியரசு தலைவர் பிரயாணம் செய்தவகையில் ரூ.26.02 கோடி, பராமரிப்பு செலவு ரூ.83.70 கோடி செலுத்தப்படாமல் இருக்கிறது.

பிரதமர் மோடி பயணச் செலவான  ரூ.45.97 கோடியை செலுத்தக்கோரி விமானப்போக்குவரத்து துறை செயலாளர்சத்யேந்திர மிஸ்ரா உள்துறை அமைச்சகத்துக்கும் பல முறை கடிதம் எழுதியும் பணம் செலுத்தப்படவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாபமா? நஷ்டமா?

கடந்த 2015-16ம் நிதியாண்டு அறிக்கையின்படி, ஏர் இந்தியா ரூ.105 கோடி லாபத்தில் செல்கிறது என்று கூறப்பட்டபோதிலும், மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகமோ ரூ.321 கோடி இழப்பில் செல்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.