தமிழகம் மற்றும் கேரளாவில் நாளையும்,  நாளை மறுநாளும்  மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

இந்த ரெட் அலர்ட்டை தொடர்ந்து கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும், கடலில் மீன் பிடிக்க சென்றவர்களை கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த மழையில் இருந்து தமிழகத்துக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட அதிகாரிகளுடனும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து மதுரை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்  வரும் 8-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை பெய்து வருவதாக பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இதனிடையே தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என்றும், இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் ஓமன் கரையை நோக்கி நகரக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் வரும் 8 ஆம் தேதி முதல்  அடுத்த 45 நாட்களுக்கு மழை, இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என  இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. ஏற்கனவே  நாளை மறுநாள் 24 சென்டி மீட்டர் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டதற்கே தமிழகத்தில் பீதி ஏற்பட்டுள்ள நிலையில்,  தற்போது தொடர்ந்து 45 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது,