குஜராத்தில் வரும் 8 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவுவதைத் தடுக்க அக்கட்சியிள் 44 எம்எல்ஏக்களும் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. குஜராத்தில் வருகின்ற ஆகஸ்ட் 8-ம் தேதி 3 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். அதில் மூன்று பேர் பாஜகவில்  இணைந்துவிட்டனர். பணத்தையும், அதிகாரத்தையும் வைத்து பாஜக. எம்.எல்.ஏ.க்களை மிரட்டுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. 

குஜராத் காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் முதலமைச்சர்  வகேலா ராஜினாமாவை தொடர்ந்து இந்த சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.. கடந்த இரண்டு நாட்களில் ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்கள் வகேலாவுக்கு நெருக்கமானவர்கள்.

இதனிடையே, பாஜக  சார்பில் அக்கட்சியின் தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்  ஸ்மிரிதி ராணி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று முன் தினம் ராஜினாமா செய்த பல்வந்த்சிங் ராஜ்புட் பாஜகவின்  மூன்றாவது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, வகேலாவுக்கு ஆதரவான மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யக்கூடும் என்பதால், மீதமுள்ளவர்களை பாதுகாக்க 44 எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு விமானம் மூலம் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

அவர்களை கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்றுக் கொண்டு பாதுகாத்து வருகிறது. அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பெங்களூரு மற்றொரு கூவத்தூராக விளங்குகிறது.