டெல்லியில் தீபாவளிக்குப்பின் காற்றின் மாசு கடுமையாக அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகியவற்றிலிருந்து விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்தபின் மீதமிருக்கும் கதிர்களை எரிப்பதால், கடுமையான புகைமூட்டம் டெல்லி வரை வந்து சேர்கிறது.

இதுதவிர வாகனங்கள் பெருக்கம், கட்டுமானப்பணிகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மாசு ஆகியவற்றால் காற்றின் தரம் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகக் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வந்த நிலையில் இன்று 600 புள்ளிகளுக்கு மேல் சென்று அபாய கட்டத்தை எட்டியது.

இந்நிலையில், லோக்கல் சர்க்கிள் ஆன்-லைன் நிறுவனம் நடத்திய ஆய்வில் மக்கள் பல்வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் 17 ஆயிரம் பேர் பங்கேற்றார்கள்.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 13 சதவீதம் பேர் வேறு எங்கும் செல்ல வழியில்லை, இந்த காற்று மாசை சகித்துக்கொண்டு வாழ்ந்துவிட வேண்டும் என்று வேதனைத் தெரிவித்துள்ளார்கள்.

40 சதவீதம் பேர் டெல்லி, என்சிஆர் பகுதிகளை விட்டு வேறு நகரங்களில் குடியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள். 31 சதவீதம் பேர் டெல்லி என்சிஆர் பகுதியில் தொடர்ந்து வசிக்க விரும்புவதாகவும், தேவையான சுவாசக் கருவிகளைப் பயன்படுத்தியும், செடிகளை வளர்த்தும் காத்துக்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

16 சதவீதம் பேர் டெல்லி என்சிஆர் பகுதியில் தொடர்ந்து வசிக்க விரும்புவதாகவும், இதுபோன்ற காற்று மாசு அதிகரிக்கும் நேரத்தில் மட்டும் வெளி நகரங்களுக்குச் சென்றுவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

காற்று மாசு எவ்வாறு குடும்பத்தினரையும் தங்களையும் பாதித்தது குறித்த கேள்விக்கு, 13 சதவீதம் பேர் குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவர் அதற்கு மேலானவர்களை மருத்துவமனைக்கு காற்றுமாசால் ஏற்படும் நோய் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளார்கள்.

29 சதவீதம் பேர் ஏற்கெனவே குடும்பத்தில் உள்ளவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவருவதாகத் தெரிவித்துள்ளார்கள்.

44 சதவீதம் பேர் காற்று மாசு தொடர்பாக உடல்நலன் சார்ந்த பிரச்சினைகள் வருகின்றது என்றாலும், இதுவரை மருத்துவமனைக்கோ அல்லது மருத்துவரிடமோ செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.14 சதவீதம் பேர் காற்று மாசால் எந்தவிதமான உடல்நலன் சார்ந்த பிரச்சினையும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.