உத்தரப் பிரதேசம் பஹ்ரைச் மாவட்டத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட மதராஸாவில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, 9 முதல் 14 வயதுடைய 40 சிறுமிகள் கழிவறையில் அடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில், சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த ஒரு மதராஸாவில் (மத பாடசாலை) ஆய்வு மேற்கொண்டபோது, 9 முதல் 14 வயதுக்குட்பட்ட 40 சிறுமிகள் ஒரு கழிவறையில் அடைக்கப்பட்டு இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாயக்பூர் வட்டம், பஹல்வாரா கிராமத்தில் உள்ள ஒரு மூன்று மாடிக் கட்டிடத்தில் சட்டவிரோதமான முறையில் மதராஸா ஒன்று செயல்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்குத் தொடர்ச்சியாகப் புகார்கள் வந்தன. இதையடுத்து, நேற்று (செப். 24) தாசில்தார் அஸ்வினி குமார் பாண்டே தலைமையிலான அதிகாரிகள் குழு, அந்தக் கட்டிடத்தில் ஆய்வு செய்யச் சென்றது.
9 முதல் 14 வயது சிறுமிகள்
இந்த ஆய்வு குறித்து மாஜிஸ்திரேட் அஸ்வினி குமார் பாண்டே பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “நாங்கள் கட்டிடத்தின் மேல் தளத்திற்குச் செல்ல முயன்றபோது, மதராஸாவின் ஊழியர்கள் எங்களைத் தடுக்க முயன்றனர். காவல்துறையின் உதவியுடன் வளாகத்திற்குள் நுழைந்தபோது, மாடியில் இருந்த ஒரு கழிவறை பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. பெண் காவலர்கள் முன்னிலையில் அந்தக் கழிவறைக் கதவு திறக்கப்பட்டபோது, உள்ளே இருந்த 40 சிறுமிகள் ஒருவர் பின் ஒருவராக வெளியே வந்தனர்” என்றார்.
மேலும், “வெளியே வந்த அந்தச் சிறுமிகள் அனைவரும் 9 முதல் 14 வயதுடையவர்கள். அவர்கள் மிகவும் பயந்த நிலையில் காணப்பட்டனர். எங்களால் அவர்களிடம் தெளிவாக எதையும் கேட்க முடியவில்லை” என்றும் அஸ்வினி குமார் தெரிவித்தார்.
பதிவு செய்த ஆவணங்கள் இல்லை
மதராஸா முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பது குறித்து விசாரித்தபோது, கடந்த மூன்று ஆண்டுகளாக பதிவு செய்யப்படாமல் இயங்கி வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
சிறுபான்மையினர் நல அதிகாரி முகமது காலித் கூறுகையில், "மதராஸா நிர்வாகத்தினரிடம் பதிவுக் குறித்த எந்த ஆவணமும் இல்லை. கடந்த 2023ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், பஹ்ரைச் மாவட்டத்தில் 495 பதிவு செய்யப்படாத மதராஸாக்கள் கண்டறியப்பட்டன. அப்போது, இது ஆய்வுக் குழுவின் கவனத்திலிருந்து தப்பிவிட்டது போலத் தெரிகிறது," என்று குறிப்பிட்டார்.
சிறுமிகள் தாங்களே பூட்டிக்கொண்டனராம்!
"மதராஸாவில் எட்டு அறைகள் இருந்தபோதிலும், சிறுமிகள் ஏன் கழிவறையில் ஒளிந்துகொள்ள வேண்டும் என்று நிர்வாகத்திடம் நாங்கள் கேள்வி எழுப்பினோம். அதற்கு, அங்கிருந்த ஆசிரியை தக்ஸீம் ஃபாத்திமா, ஒரு சிறுமி பீதியடைந்து சத்தம் போட்டதில், மற்ற சிறுமிகள் பீதியடைந்து தாங்களே பூட்டிக்கொண்டனர்' என்று பதிலளித்தார்" என்று அஸ்வினி குமார் கூறினார்.
தற்போது மதராஸாவில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அதனை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் காலித் கூறினார். மேலும், சிறுமிகள் அனைவரையும் அவர்களது வீடுகளுக்குப் பத்திரமாக அனுப்பவும் அறிவுறுத்தினோம். அனைவரும் பத்திரமாக வீடு சென்று சேர்ந்ததாகத் தெரிகிறது," என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
வழக்குப் பதிவு இல்லை
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை முதல் தகவல் அறிக்கை (FIR) எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று நகரக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமானந்த் பிரசாத் குஷ்வாஹா தெரிவித்தார்.
"சிறுமிகளின் பெற்றோர் உள்பட யாரும் இதுவரை வழக்குப் பதிவு செய்ய எங்களை அணுகவில்லை. ஏதேனும் புகார் வந்தால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்றும் அவர் கூறினார்.
