உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 27,890 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 881 பேர் பலியாகி இருக்கின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதனிடையே கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி மார்ச் 24-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் ஆந்திர மாநில ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் விஜயவாடாவில் இருக்கிறது. அம்மாநிலத்தின் ஆளுநராக விஷ்வபூஷன் ஹரிச்சந்திரன் செயல்பட்டு வருகிறார். அண்மையில் ஆளுநரின் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு  உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. மேலும் ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் ஒரு செவிலியர், துப்புரவு பணியாளர் மற்றும் வீட்டு வேலை உதவியாளர் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் 4 பேரும் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளுநர் விஷ்வபூஷன் ஹரிச்சந்திரனுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. முன்னதாக ஆளுநர் மாளிகை முழுவதும் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது.