லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலில் ஏற்கனவே 20 வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில், மேலும் 4 வீரர்கள் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியா-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே திடீரென கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இரு நாட்டு படைகளையும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில், இருதரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தாக நேற்று காலை தகவல்கள் வெளியாகின. இதை தொடர்ந்து, இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. . மேலும் சிலர் படுகாயமடைந்து இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. சீனா தரப்பில் உயிரிழந்தோர் மற்றும் படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 43 என்று ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டது. 

இந்நிலையில், காயமடைந்த இந்திய வீரர்களில் 4 வீரர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா-சீனா மோதலில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.