இந்தியாவில் முதன்முதலாக கேரள மாநிலத்தில் தான் கொரோனா தொற்று பரவத்தொடங்கியது. அங்கு இதுவரை 447 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில் மருத்துவர்கள் மற்றும் அரசின் தீவிர நடவடிக்கைகளில் 324 பேர் குணமடைந்துள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக இருக்கிறது. பல மாநிலங்களில் குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று ஏற்படுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணமாக இருக்கும் நிலையில் கேரள மாநிலத்தில் 4 மாதக் குழந்தை ஒன்று கொரோனா நோய்க்கு பலியான சம்பவம் சோகத்தை உருவாக்கியிருக்கிறது.

கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு பிறக்கும் போதே இதயநோய் பாதிப்பு இருக்கவே தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து கோழிக்கோடு மருத்துவமனையில் குழந்தையை பெற்றோர் அனுமதித்தனர். அங்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் குழந்தை வைக்கப்பட்டது.  எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை இன்று காலையில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் 5 மருத்துவர்கள் தற்போது தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். குழந்தையின் உறவினர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார். எனினும் அவருக்கும் குழந்தைக்கும் நேரடி தொடர் இல்லை என்று கூறப்படுகிறது. குழந்தையின் பெற்றோருக்கும் பாதிப்பு இல்லாத நிலையில் எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து சுகாதாரத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அண்மையில் டெல்லியில் ஒன்றரை மாதக் குழந்தை ஒன்று கொரோனாவிற்கு பலியானது குறிப்பிடத்தக்கது.