36 Beer 83 bottle of alcohol for rat drinking in rajashtan
பீகாரில் 9 லட்சம் லிட்டர் மதுவை எலி குடித்துவிட்டதாக போலீசார் கூறியதைப் போல, ராஜஸ்தானிலும் 36 பாட்டில் பீர், 83 பாட்டில் ‘குவாட்டர் பாட்டில்’ மதுவை எலி குடித்துவிட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
8ஆண்டு வழக்கு
கடந்த 2009ம் ஆண்டு, ஜூன் 16-ந்தேதி உதய்பூரைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து கலால் வரித்துறையினர் 36 பீர் பாட்டில்கள், 83 குவாட்டர்பாட்டில் மதுக்களை பறிமுதல் செய்தனர்.அந்த பாட்டில்களை பத்திரமாக பாதுகாப்பில் வைத்து இருந்தனர்.
காலிபாட்டில்
இந்நிலையில், மதுபாட்டில்களை கைப்பற்றியது தொடர்பான வழக்கு உதய்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களை கலால் அதிகாரிகள் நீதிமன்றத்தில் அளித்தனர். அப்போது, அனைத்து பாட்டில்களிலும் மது இல்லாமல், காலியாக இருந்துள்ளது.
எலி குடித்து விட்டது
அது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பியபோது, மதுவை எலி குடித்து இருக்கலாம் என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதையடுத்து, குற்றவாளி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கலால் வரித் துறையினருக்கு சம்மன் அனுப்பி மது உள்ள பாட்டில்களை கொண்டு வர உத்தரவிடக் கோரிக்கை விடுத்தார்.
மேலும், அதிகாரிகள் இப்படி காலிபாட்டில்களை நீதிமன்றத்தில் காட்டியபோது, அங்கிருந்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.முதலில் இயற்கையாக மதுவகைகள் காலியாக இருக்கலாம் எனக் கூறிய அதிகாரிகள், பின்னர், எலி குடித்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை வரும் 15-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடந்த வாரம் பீகாரில் இதேபோல பறிமுதல் செய்து வைத்து இருந்த 9 லட்சம் லிட்டர் மதுவை எலி குடித்துவிட்டதாக போலீசார் உயர் அதிகாரிகளிடம் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
