ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 33 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 22 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டம் கேஷ்வானில் இருந்து கிஸ்த்வார் நோக்கி இன்று காலையில் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மினி பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. கிஸ்த்வாரை நெருங்கியபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து கடுமையாக சேதம் அடைந்தது. 

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 33 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 22 பேர் படுகாயமடைந்தனர். விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறைக்கும் மற்றும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயமடைந்த 22 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது. 

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மலைப்பாதையில் செல்லும் பேருந்து தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.