இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துவிட்டது. உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்து நான்காமிடத்தில் இந்தியா உள்ளது. 

இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு மிகத்தீவிரமாக உள்ளது. மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு கடுமையாக உள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 1,01,141 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 40,698 பேரும் டெல்லியில் 36,824 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 1,01,141 பேரில் 97,407 பேரை ஆய்வு செய்ததில், 31-40 வயதினர் தான் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் தான் கொரோனாவால் எளிதாக தொற்றுக்கு ஆளாவார்கள் என சொல்லப்பட்டுவந்த நிலையில், மகாராஷ்டிராவில் இளம் வயதினரே அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

அந்த 97,407 பேரில் 19,523 பேர், அதாவது 20.04% பேர் 31 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.  17,573 பேர்(18.04%) 41 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள். 9,991 பேர்(10.26%) 61-70 வயதினர் என்றும் 4,223 பேர்(4.34%) 71-80 வயதினர் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

3,225 பேர்(3.31%) பத்து வயது வரையிலான குழந்தைகள் என்றும் 6,262 பேர்(6.43%) 11 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகமான அளவில் இளம் வயதினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.