ஆதார் ஆணையம் கவர்ச்சிகரமான பரிசுப் போட்டியை அறிவித்துள்ளது. இப்போட்டியில் ஆதார் குறித்த 15 சந்தேகங்கள் குறித்து பதில் அளிக்கும் வகையில் வீடியோ அல்லது கிராபிக் வடிவில் விளக்கப் படங்களைத் தயாரிக்க வேண்டும். 

மொத்தம் 48 பரிசுகள் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.30,000 ரொக்கப் பரிசு கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ஜூலை 8, 2019க்குள் தங்களது படைப்பை media.division@uidai.net.in என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஆன்லைனில் ஈமெயில் மூலம் மட்டுமே படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படும். 

இந்தியக் குடிமகனாக இருப்பவர்களும் தங்கள் பெயரில் ஆதார் வைத்திருப்பவர்களும் மட்டுமே இப்போட்டியில் பங்கேற்கத் தகுதி உடையவர்கள் ஆவர். படைப்பை அனுப்பும்போது, தனது ஆதார் எண் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆம் அல்லது இல்லை என்ற அளவில் மட்டும் தெரிவிக்க வேண்டும். வங்கிக் கணக்கு விவரம் தரத் தேவையில்லை. மேலும், ஆதார் எண், ஆதாரில் உள்ளபடி பெயர், தொடர்புகொள்வதற்கான முகவரி, மொபைல் எண் ஆகியவற்றையும் அளிக்க வேண்டும். 

போட்டிக்கு அனுப்பும் படைப்பு தனிநபரின் உருவாக்கமாக இருக்க வேண்டும். குழுவாக உருவாக்கியதாக இருக்கக் கூடாது. இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும் இருக்க வேண்டும். ஒருநபர் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளில் தங்கள் படைப்பை அனுப்பலாம். அனுப்பும் படைப்பு சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். வேறு யாருடையதையும் தன்னுடைய பெயரில் அனுப்பக் கூடாது. 

போட்டிக்கு அனுப்பும் படைப்பை வேறு எங்கும் வெளியிடவோ பகிரவோ கூடாது. வீடியோவில் பயன்படுத்தப்படும் ஆதார் விவரங்கள் ப்ளர் செய்து மறைக்கப்பட்டிருக்க வேண்டும். கற்பனைத்திறனுடன் புதுமையாக உருவாக்கப்பட்ட படைப்புக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் என அறிவித்துள்ளது.