குஜராத்தில் ஒரே ஏடிஎம்மில்  பணம் எடுத்த 3 ராணுவ வீரர்களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா பரவியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் அழையா விருந்தாளியாக இந்தியா உள்ளிட்ட 210க்கும் மேற்பட்ட நாடுகளில் அடியெடுத்து வைத்து பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. ஏழை, பணக்கார நாடுகள் என்ற பாரபட்சம் இல்லாமல் மனித குலத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. கண்ணுக்கே தெரியாத அந்த நுண்ணுயிரியிடமிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். 

இதனை கட்டுப்படுத்த  இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர் மேலும் 19 நாட்கள் அதாவது மே மாதம் 3-ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். ஆனாலும், நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறதே தவிர சற்றும் குறையாமல் இருந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 23,077  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 718 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், குஜராத்தின் பரோடாவில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் கடந்த வியாழக்கிழமை ராணுவ வீரர்கள்  3 பணம் எடுத்துள்ளனர். இதனையடுத்து, இவர்கள் 3 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்களுக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், 3 பேரும்  பரோடாவில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்து 28 நபர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ராணுவ வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.