சுயசார்பு இந்தியா திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.20 லட்சம் கோடிக்கான முதற்கட்ட அறிவிப்புகளை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். 

இன்று புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்களுக்கான அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டன. 

கொரோனா ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டது, புலம்பெயர் தொழிலாளர்கள் தான். வருமானமும் இல்லாமல் சொந்த ஊருக்கு திரும்பவும் முடியாமல் தவித்துவந்த புலம்பெயர் தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு திருப்பியனுப்பப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக, சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மூன்று அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டார். 

1. அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக, குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும், 2 மாதங்களுக்கு 5 கிலோ விலையில்லா அரிசி அல்லது கோதுமை மற்றும் ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும். அதற்காக ரூ.3500 ஒதுக்கப்பட்டுள்ளது.

2. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் 23 மாநிலங்களில் 67 கோடி மக்கள் பயன்படும் வகையில் செயல்படுத்தப்படும். இதன்மூலம் வேறு மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயனடைவார்கள். 

3. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீட்டுவசதி ஏற்படுத்தித்தரப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.