2500 people have applied for Padma awards

2018ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதுகளுக்கு ஜூன் 30-ந் தேதி வரை 2,500 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் கல்வி, கலை, இலக்கியம், விளையாட்டு, இசை, நாடகம், அறிவியல் உள்ளிட்ட பல பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பத்ம,பத்ம விபூஷன், பத்ம பூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டு ,பின்னர் வழங்கப்படும்.

நாட்டின் உயரிய பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க வரும் செப்டம்பர் 15-ந்தேதிகடைசியாகும். கடந்த மாதம் 30-ந் தேதி வரை இதுவரை 2,500 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 18 ஆயிரத்து 761 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர்.

மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், அமைச்சரகங்கள், மத்திய அரசின் துறைகள், பாரத ரத்னா, பத்ம விபூஷன் விருந்து பெற்றவர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், எம்.பி.க்கள், தனிநபர்கள், அமைப்புகள் விருதுகளுக்கு பரிந்துரை செய்யலாம்.

விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் பத்மாஇணையதளம் (www.padmaawards.gov.in) மூலமாகவே அனுப்ப வேண்டும். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் பிரதமரால் உருவாக்கப்பட்ட, பத்ம விருதுகள் குறித்து ஆலோசிக்கும் கமிட்டி முன் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு விருதுக்கு உரிய நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

2017ம் ஆண்டு 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 7 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 75 பேருக்கு பத்ம விருதுகளும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.