ஆந்திர தலைநகரான அமராவதியில் புதிதாக அமைக்கப்பட உள்ள சட்டமன்ற கட்டிடத்தை, உலகின் மிக உயரமான சிலையான சர்தார் பட்டேல் சிலையை விட உயரமாக கட்டுவதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் 182 மீட்டர் உயரத்தில் சர்தார் பட்டேல் சிலை திறக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அதற்கு போட்டியாக உயரமான சிலை அமைக்க பல்வேறு மாநிலங்கள் போட்டி போட்டு அறிவித்து வருகின்றன.

ராமருக்கு 201 மீட்டரில் சிலை அமைக்க உள்ளதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காவிரி தாய்க்கு 125 அடியில் சிலை அமைக்க போவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளன. இந்த வரிசையில் தற்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் 250 மீட்டர் உயரத்தில் சட்டமன்ற கட்டிடம் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த உயரமான சட்டமன்ற கட்டிடத்தின் மாதிரி வடிவமைப்பில் சிறு திருத்தங்கள் செய்து, 2 நாட்களில் சந்திரபாபு நாயுடு இறுதி செய்ய உள்ளதாக லண்டனை சேர்ந்த கட்டுமான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

3 மாடிகளை கொண்டதாக அமைக்கப்பட உள்ள இந்த சட்டமன்ற கட்டிடத்தில் 2 மாடங்கள் அமைக்கப்பட உள்ளன. 80 மீட்டர் உயர்த்தில் உள்ள முதல் மாடம் 300 பேர் வரை அமரக்கூடிய வசதி கொண்டதாகவும், 2வது மாடம் 250 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்பட உள்ளது. 20 பேர் அமரக்கூடிய வசதி கொண்ட இந்த 2வது மாடத்தில் இருந்து அமராவதி நகர் முழுவதையும் பார்க்க முடியும்.

2வது மாடம் முழுவதும் கண்ணாடியால் அமைக்கப்பட உள்ளதாகவும், இங்கு செல்ல லிப்ட் வசதியும் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. புயல், நிலநடுக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்படாத வகையில் இந்த கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. இந்த சட்டமன்ற  கட்டிடம் அமைக்கப்பட்டால் நாட்டில் மிக உயரமான கட்டிடமாக இது கருதப்படும்.

நவம்பர் மாத இறுதியில் இந்த சட்டமன்ற கட்டிடம் கட்ட டெண்டர் கோரப்பட உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த கட்டிட பணிகள் நிறைவு செய்யப்பட உள்ளது. உயரமான சட்டசபை கட்டிடம் மட்டுமின்றி தலைமை செயலகத்திற்காக 5 கட்டிட மாதிரிகளையும் சந்திரபாபு நாயுடு தேர்வு செய்து வைத்துள்ளதா ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.