தெலங்கானா ரங்கா ரெட்டி மாவட்டத்தில், அரசுப் பேருந்தும் ஜல்லி கல் ஏற்றிய லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 24 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். செவெல்லா அருகே உள்ள இந்திராரெட்டி நகரில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 6.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

தண்டூரிலிருந்து ஹைதராபாத் நோக்கி வந்துகொண்டிருந்த தெலங்கானா அரசுப் பேருந்தின் மீது, எதிர்த் திசையில் அதிவேகமாக வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. அந்த லாரி ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறது.

லாரி மோதிய வேகத்தில் பேருந்தின் முன் பகுதி முற்றிலுமாக நொறுங்கிச் சேதமடைந்தது. பேருந்து ஓட்டுநர் மற்றும் லாரி ஓட்டுநர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களுடன் சேர்ந்து பல பயணிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மீட்புப் பணியில் ஜேசிபி வாகனங்கள்

லாரியில் இருந்த ஜல்லி கற்கள் பேருந்தின் மீது சரிந்ததால், பேருந்தின் உள்ளே பல பயணிகள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து, அதிகாரிகள் ஜேசிபி (Earthmovers) வாகனங்களைப் பயன்படுத்தி மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

தெலுங்கானா அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தகவல்படி, விபத்துக்குள்ளான பேருந்தில் சுமார் 70 பயணிகள் பயணித்திருக்கலாம் எனத் தெரிகிறது. காயமடைந்தவர்களில் 14 பேர் தண்டூரிலுள்ள PMR மருத்துவமனையிலும், 10 பேர் விகாராபாத் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆரம்பத்தில் காயமடைந்தவர்கள் செவெல்லா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். கவலைக்கிடமாக இருந்தவர்கள் முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டியின் அறிவுறுத்தலின் பேரில், காந்தி மற்றும் உஸ்மானியா மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். அங்கே அவர்களுக்காகச் சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கட்டுப்பாட்டு அறை அமைப்பு

முதல்வரின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர் அனைத்துத் துறை அதிகாரிகளையும் எச்சரித்ததுடன், நிலைமையைக் கண்காணிக்கச் தலைமைச் செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையையும் அமைத்துள்ளார்.

உதவி தேவைப்படும் பொதுமக்கள் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்: 9912919545, 9440854433.

போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகளுடன் விசாரித்தார். காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய ரங்கா ரெட்டி மாவட்ட ஆட்சியருக்கும் அவர் உத்தரவிட்டார்.

பிரதமர் இரங்கலும் நிவாரணமும்

இந்தத் துயரச் சம்பவம் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

"இந்தக் கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் எனது எண்ணங்கள் துணையாக நிற்கின்றன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்," என்று பிரதமர் கூறியுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.

விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறியப் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.