கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து! 17 பேர் உயிரிழப்பு! பலர் படுகாயம்!
Accident: அரசு பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தின் மீது லாரி கவிழ்ந்ததில், சம்பவ இடத்திலேயே 17 பயணிகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர்.

அரசு பேருந்து விபத்து
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மிரியால குடா அருகே அரசு பேருந்து மீது ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் ஜல்லி லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரி பேருந்தின் மீது கவிழ்ந்ததில் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
17 பேர் உயிரிழப்பு
உடனே விபத்து தொடர்பாக செவெள்ளா போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் நீண்ட நேரம் போராடி பேருந்து மீது விழுந்த லாரியை 3 ஜேசிபிக்கள் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு அப்புறப்படுத்தினர். பின்னர் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தண்டூரில் இருந்து ஹைதராபாத் நகருக்கு 70 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரி பேருந்து மீது மோதியுள்ளது. பேருந்தில் மாணவர்கள், ஊழியர்கள் உட்பட 70 பேர் பயணித்தனர். வார இறுதியில் ஊரிலிருந்து திரும்பியபோது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து காரணமாக ஹைதராபாத்-பீஜப்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பவன் கல்யாண் இரங்கல்
அரசு பேருந்தை லாரி ஓட்டுநர் ஓவர்டேக் செய்ய முயற்சித்த போது விபத்து நடந்ததா? இல்லை தவறான திசையில் சென்றதால் விபத்து ஏற்பட்டதா? என்ற கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்து தொடர்பாக பவன் கல்யாண், கேடிஆர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அரசை வலியுறுத்தியுள்ளனர்.