2024 மக்களவை தேர்தல்: உத்தரப்பிரதேச ஜோடோ யாத்திரை தொடங்கும் காங்கிரஸ்!
2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு, உத்தரப்பிரதேச ஜோடோ யாத்திரையை காங்கிரஸ் கட்சி தொடங்கவுள்ளது
கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீநகர் வரை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையிலான ‘பாரத் ஜோடோ யாத்திரை’-க்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச ஜோடோ யாத்திரையை அம்மாநில காங்கிரஸ் கட்சி வருகிற 20ஆம் தேதி தொடங்கவுள்ளது.
உத்தரப்பிரதேச ஜோடோ யாத்திரையானது அம்மாநிலத்தின் சஹாரன்பூரில் தொடங்கி சீதாபூரில் முடிவடையவுள்ளது. அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தலைமையில் 16 நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கி இந்த யாத்திரையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
யாத்திரையை வெற்றிகரமாக நடத்தும் பொருட்டு, நிர்மல் காத்ரி, சல்மான் குர்ஷித், அஜய் லல்லு, பிரிஜ்லால் காப்ரி, ஜாபர் அலி நக்வி உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், உத்தரப்பிரதேச ஜோடோ யாத்திரையை காங்கிரஸ் கட்சி தொடங்கவுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
2024 மக்களவை தேர்தல்: யாருக்கு வெற்றி? ஆட்சியமைப்பது யார்? வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்!
எதிர்வரவுள்ள 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்ட ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தெலங்கானாவில் ஆட்சியை கைபற்றிய காங்கிரஸ், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. மத்தியப்பிரதேசத்திலும் தோல்வியை சந்தித்தது. அதன் தொடர்ச்சியாக, கட்சியின் மோசமான செயல்திறனை ஆய்வு செய்ய காங்கிரஸ் பிரமுகர்கள் இந்த மாத தொடக்கத்தில் பல்வேறு கூட்டங்களை நடத்தினர் என்பது கவனிக்கத்தக்கது.