200 rupees note in ATM

மும்பை, ஜன.5- குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் சப்ளையை அதிகரிக்க 200 ரூபாய் நோட்டுக்களை வைக்கும் வகையில் ஏ.டி.எம்.களை மறுவடிவமைக்க வேண்டும் என்று வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

 செல்லாது

 ஊழல் கருப்பு பணம் மற்றும் போலி ரூபாய் உள்ளிட்டவற்றை ஒழிக்கும் நோக்கில் 2016 நவம்பர் மாதம் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் அதிக அளவில் 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டது.

 இதனால் பொதுமக்கள் கடும் சிக்கலை எதிர்கொண்டனர். 2000 ரூபாய் நோட்டுக்கு சில்லரை மாற்ற படாதபாடு பட்டனர். இந்த நிலையில் சில்லரை தட்டுப்பாட்டை போக்கும் வகையில் கடந்த செப்டம்பரில் புதிதாக 200 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டது. 200 ரூபாய் தாளின் அளவு வித்தியாசமாக இருப்பதால் அவற்றை ஏ.டி.எம்.களில் வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

 வடிவமைப்பு பிரச்னை

 தற்சமயம் வங்கிகள் வாயிலாகதான் 200 ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு வருகிறது. வடிவமைப்பு பிரச்னை காரணமாக இதுவரை 200 ரூபாய் நோட்டுக்கள் ஏ.டி.எம்.களில் வைக்கப்படவில்லை. இந்த நிலையில் குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டு புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் விரைவாக ஏ.டி.எம்.களை மறுவடிவமைக்க என்று வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். எந்திரங்கள் தயாரிப்பு நிறுவனங்களிடம் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 2.2 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் ஏ.டி.எம்.கள் உள்ளன. இவற்றை மறுவடிவமைப்பதற்காக வங்கிகள் ரூ.110 கோடிக்கும் மேல் செலவிட வேண்டியது இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு ஏ.டி.எம்.-ஐ மறுவடிவமைக்க சராசரியாக 5 ஆயிரம் ரூபாய் செலவாகும். மேலும் இந்த பணிகள் அடுத்த 6 மாதத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.