கொல்கத்தாவில் 20 வயது இளம்பெண் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அறிமுகமான இருவரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ரிஜென்ட் பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவில், 20 வயது இளம் பெண் ஒருவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அறிமுகமான இருவரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டம்

ஹரிதேவ்பூரைச் சேர்ந்த அந்தப் பெண், தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக செப்டம்பர் 5, வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பர்களான சந்தன் மல்லிக் மற்றும் திவிப் பிஸ்வாஸ் ஆகியோருடன் சென்றுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமான இவர்கள் இருவரும் தங்களைக் கல்கத்தாவில் உள்ள ஒரு பூஜை கமிட்டியின் தலைவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். இதன் மூலம் அவர்கள் மூவருக்கும் இடையில் நட்பு வளர்ந்துள்ளது.

தப்பிப் வந்த பெண்ணின் புகார்

சம்பவத்தன்று இரவு, அந்தப் பெண்ணை ரிஜென்ட் பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இரவு உணவை முடித்துக்கொண்டு, அப்பெண் வீட்டிற்குத் திரும்ப முயன்றபோது, இருவரும் கதவைப் பூட்டி, அப்பெண்ணைத் தாக்கி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மறுநாள் காலை, எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டிற்குத் திரும்பிய அப்பெண், ஹரிதேவ்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குற்றவாளிகள் தலைமறைவு

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளான சந்தன் மல்லிக் மற்றும் திவிப் பிஸ்வாஸ் ஆகியோரைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றவாளி சந்தன் மல்லிக், பாதிக்கப்பட்ட பெண்ணை மற்றொரு குற்றவாளியான திவிப் பிஸ்வாஸின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் அவரைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது," என்று கூறியுள்ளனர்.

மீண்டும் அதிரும் கொல்கத்தா

இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜூன் மாதம், கொல்கத்தா சட்டக் கல்லூரியில் 24 வயது சட்ட மாணவி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.