கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயநகர் தொகுதி எம்.எல்.ஏவான ஆனந்த் சிங் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்காக பாஜக காய் நகர்த்திவரும் நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயநகர் தொகுதி எம்.எல்.ஏ. ஆனந்த் சிங் இன்று காலை ராஜினாமா செய்தார். ஆனந்த் குமாருக்கு அமைச்சரவையில் இடமளிப்பதாக காங்கிரஸ் கட்சி உறுதியளித்திருந்ததாகவும், 2 முறை அமைச்சரவை மாற்றத்திற்கு பின்னரும் அவர் இடம்பெறாததால் அதிருப்தியில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.

 

இந்நிலையில், அம்மாநிலத்தில் நடைபெற்று வரும் கூட்டணி அரசுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ.வான ரமேஷ் ஜர்கிஹோலி ராஜினாமா செய்துள்ளார். இந்த வரிசையில் மகேஷ் குமதள்ளி, பிரதாப் கவுடா மற்றும் பி.சி.பாட்டீல் என எம்.எல்.ஏக்கள் வரிசையாக ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.