கொரோனாவால் இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய மக்களை கொரோனாவிலிருந்து காக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை எடுத்துவருகின்றன. கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார சரிவிலிருந்து மீளவும் மக்கள் எதிர்கொண்டுள்ள கஷ்டங்களை போக்கவும் இந்திய அரசு போராடிவருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் இந்த சவால்களை எதிர்கொண்டு அதிலிருந்து மீள போராடுகின்றன.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழலிலும் தீவிரவாதிகள் தங்களது கொடூர குணத்தை காட்டிவருகின்றனர். ஸ்ரீநகரிலிருந்து 17 கிமீ தொலைவில் உள்ள பண்டச் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை(BSF) வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த தீவிரவாதிகள், ராணுவ வீரர்கள் மீது திடீரென சரமாரி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிவிட்டனர். 

இந்த தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். கொரோனா ஏற்படுத்தியுள்ள இக்கட்டான சூழலிலும் தீவிரவாதிகள், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த 7 வாரத்தில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள், துணை ராணுவப்படை வீரர்கள் என மொத்தம் 27 வீரர்கள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.