கேரள மாநிலம் சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு கேரளா மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்படுகிறது. கார்த்திகை,மார்கழி மாதங்களில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக இரண்டு மாதங்கள் தொடர்ந்து நடை திறந்திருக்கும். இந்த காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க திரள்வார்கள்.

கார்த்திகை 1 முதல் மார்கழி 11ம் தேதி வரை சபரிமலையில் மண்டல காலம் ஆகும். 41 நாட்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் மலையில் அலை மோதும். இந்த நிலையில் இந்த வருடம் சபரிமலை வந்த பக்தர்களில் 19 பேர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பதாக திருவாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து தேவசம் போர்டு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சபரிமலைக்கு யாத்திரை வந்த பக்தர்களில் 19 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்திருப்பதாக கூறுபட்டுள்ளது.

பம்பையில் 15 பேரும் கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்திருக்கின்றனர். இறுதியாக  தமிழ்நாட்டின் கூடலூரைச் சேர்ந்த ராஜேந்திரன்(61) என்பவர் மரணமடைந்திருக்கிறார். பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்லும் போது அப்பாச்சிமேட்டில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போது நடைபெறும் மண்டல காலத்தில் பம்பை கணபதி கோவிலில் இருந்து சபரிமலை சன்னிதானம் வரை 15 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 30,157 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. அதில் அவசர பிரிவு சிகிச்சைகளின் எண்ணிக்கை மட்டும் 414 என தேவசம் போர்டு தெரிவித்திருக்கிறது.