பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற மோசடி தொடர்பாக அதில் பணியாற்றி வரும் 18 ஆயிரம் ஊழியர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ்மோடி ரூ.11,500 கோடி மோசடி செய்தது குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இப்போது வருமான வரித்துறையினரும் இதில் தலையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் நிரவ்மோடி மற்றும் அவரது நிறுவனம் மூலம் உள்ள வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து அவருடைய 141 வங்கி கணக்குகளை முடக்கினார்கள்.  இதில் ரூ.145 கோடி அளவுக்கு பணம் முடக்கப்பட்டுள்ளது

சி.பி.ஐ. அதிகாரிகள் மும்பை ஒர்லியில் உள்ள நிரவ்மோடியின் மனைவி அமிமோடிக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல் வைத்தனர். இப்போது நிரவ்மோடியின் பண்ணை வீட்டுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த பண்ணை வீடு மும்பைக்கு அருகே உள்ள அலிபார்க் என்ற இடத்தில் உள்ளது.

1 ஏக்கர் நிலப்பரப்பில் மிக பிரமாண்டமாக இந்த வீடு அமைந்துள்ளது. வீடு மட்டுமே 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 5 படுக்கை அறைகள், நீச்சல் குளம் ஆகியவையும் அதில் உள்ளன. இந்த வீட்டை நிரவ்மோடி 2004 ம் ஆண்டு தனது வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து ரூ-.32 கோடிக்கு வாங்கியுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியின் 9 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யபட்டது. ரோல்ஸ் ராய்ஸ், பென்ஸ் உள்ளிட்ட 9 சொகுசு கார்களை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை .

இந்த மோசடி நடைபெற்றதாக கூறப்படும் பிஎன்பி வங்கிக்கு சீல் வைக்கப்பட்டும், மோசடிக்கு உதவிய வங்கி அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டள்ள நிலையில், நாடு முழுவதும்  பிஎன்பி வங்கியில் பணியாற்றி வரும் 18 ஆயிரம் ஊழியர்கள் உடடினயாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 72 மணி நேரத்ததில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியிடமாற்றம் செய்யபப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்பிரச்சனையில் வெளி நாட்டுக்கு தப்பி ஓடிய நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் அமலாக்கத் துறை ஈடுபட்டுள்ளது.