இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் தனியார் பேருந்து ஒன்று மண்ணில் புதைந்தது. இந்த விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது மீட்பு பணிகள் தொடர்கின்றன.

இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் சிக்கிய தனியார் பேருந்து ஒன்று முழுவதும் மண்ணில் புதைந்துள்ளது. அதில் பயணித்தவர்களில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மண்ணில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த சோகமான சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) பாலு பாலம் (Ballu Bridge) அருகே நிகழ்ந்துள்ளது. மாரோட்டன்-கலாவுல் (Marotan–Kalaul) வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது, மலையிலிருந்து மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. இந்த விபத்தில் பேருந்து முழுவதும் சேதமடைந்து மண்ணுக்குள் புதைந்தது.

குறைந்தது 15 பேர் உயிரிழப்பு

இந்தத் துயரச் சம்பவம் குறித்து பிலாஸ்பூர் துணை ஆணையர் ராகுல் குமார் அளித்த தகவலில், இதுவரை 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் உறுதிப்படுத்தினார். விபத்தின்போது பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்திருக்கலாம் என்றும், சரியான எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் இருந்து வரும் வீடியோகளில், ஜே.சி.பி இயந்திரம் மூலம் மண் அகற்றப்பட்டு, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெறுவது தெரிகிறது. நிலச்சரிவில் பாறைகள் உருண்டு வந்து விழுந்ததால் பேருந்தின் மேற்கூரை உள்ளிட்ட பகுதிகள் சிதைந்திருப்பதையும் வீடியோக்களில் காண முடிகிறது.

Scroll to load tweet…

முதலமைச்சர் இரங்கல்:

விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் தாக்கூர் சுக்விந்தர் சிங் சுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன், மீட்புப் பணிகள் குறித்து நிமிடத்திற்கு நிமிடம் தகவல்களைப் பெற்று வருகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

மீதமுள்ள பயணிகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.