இந்திய ராணுவத்தில் குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள் மற்றும் நாய்கள் உட்பட சுமார் 12,600 விலங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விலங்குகள் குண்டுகளைக் கண்டறிதல், மீட்புப் பணிகள் போன்ற பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்திய ராணுவத்தில் குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள் மற்றும் நாய்கள் உட்பட சுமார் 12,600 விலங்குகள் பயன்படுத்தப்படுவதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத் துறையில் விலங்குகளைப் பயன்படுத்துவது குறித்த விரிவான கொள்கைகள் மற்றும் அவற்றிற்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.
விலங்குகளுக்கு சிறப்பு கவனிப்பு
ராணுவத்தில் உள்ள விலங்குகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு, ராணுவ கால்நடை மருத்துவர்கள் மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்களால் கண்காணிக்கப்படுகின்றன. இந்த விலங்குகளைப் பணி காலத்தில் எவ்வாறு பராமரிப்பது மற்றும் ஓய்வு பெற்ற பின்னர் எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பது குறித்த விரிவான கொள்கைகள் வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
ராணுவ நடவடிக்கைகளில் விலங்குகளின் பங்கு
நாய்கள் மற்றும் கோவேறு கழுதைகள் போன்ற விலங்குகளுக்கு ராணுவம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த விலங்குகள், வெடிகுண்டுகளைக் கண்டறிதல், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், மற்றும் கடினமான நிலப்பரப்புகளில் பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
உணவு மற்றும் மருத்துவப் பராமரிப்பு
அனைத்து விலங்குகளுக்கும் அவற்றின் தேவைகளுக்கேற்ப அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன. மேலும், அனைத்து விலங்குகளும் கட்டாயமாகச் சிறப்பு அல்லது காலமுறை மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் பல்வேறு நோய்களுக்கான வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்கின்றன.
ஆராய்ச்சித் திட்டங்கள்
ராணுவத்தில் பயன்படுத்தப்படும் விலங்குகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மற்றும் மேம்படுத்த, பல்வேறு அரசு நிறுவனங்கள் மற்றும் புகழ்பெற்ற துறைகளுடன் இணைந்து ராணுவம் தொடர்ந்து ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் சஞ்சய் சேத் தனது பதிலில் மேலும் குறிப்பிட்டார்.
