சல்யூட்! மாறிமாறி வரும் பேரிடர்கள்... மக்களுக்காக உயிரைக் கொடுத்து உழைக்கும் ராணுவம்!
உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர் மற்றும் அமர்நாத் யாத்திரை போன்ற இடங்களில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களில் இந்திய ராணுவம் மேற்கொண்ட மீட்புப் பணிகள் குறித்த செய்தி தொகுப்பு இது. பேரிடர்களின்போது ராணுவத்தின் நடவடிக்கைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

உத்தரகண்ட் மேக வெடிப்பு
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தராலி கிராமத்தில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்க, இந்திய ராணுவத்தின் 'IBEX படைப்பிரிவு' உடனடியாக களத்தில் இறங்கியது. கடுமையான நிலச்சரிவுகள், சீரற்ற நிலப்பரப்பு, இடைவிடாத சேறு மற்றும் வெள்ளம் ஆகியவற்றுக்கு இடையே, ராணுவ வீரர்கள் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்டனர். சிக்கியவர்களை வெளியேற்றுவதுடன், காயமடைந்தவர்களுக்கு அவசர மருத்துவ உதவியும் அளித்து வருகின்றனர். இவர்களின் உடனடி தலையீடு, பேரிடரின் விளைவுகளைக் குறைத்து, மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்ட் பனிச்சரிவு
கடந்த பிப்ரவரி 28 அன்று உத்தரகண்டின் மனா பகுதியில், எல்லைச் சாலைகள் அமைப்பின் (BRO) முகாமில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்க, IBEX படைப்பிரிவு வீரர்கள் களத்தில் இறங்கினர். மோசமான வானிலை மற்றும் கடினமான நிலப்பரப்பிலும், மூன்று நாட்கள் இடைவிடாமல் இரவு, பகலாக தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். IBEX படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் எம்.எஸ். தில்லான் கூறுகையில், "எங்களது வீரர்கள் 46 பேரை பத்திரமாக மீட்டனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எட்டு பேர் உயிரிழந்தனர்," என்று தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ராணுவம் சார்பாக அவர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இந்திய விமானப்படை, இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ITBP), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில அரசு ஆகியவற்றின் கூட்டு முயற்சிக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் வெள்ளம்
கடந்த ஜூலை மாதம் ஜம்மு-காஷ்மீரின் ராஜௌரி மாவட்டத்தில் உள்ள நௌஷேரா தாவி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில், நடு ஆற்றில் சிக்கிய ஒரு சிறுவனைக் காப்பாற்ற இந்திய ராணுவம் விரைந்து செயல்பட்டது. உள்ளூர் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, மோசமான வானிலையிலும், 'வைட் நைட் கார்ப்ஸ்' பிரிவின் 662வது ராணுவ விமானப் படைப்பிரிவு, ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டது. இந்திய ராணுவம், மாநில பேரிடர் மீட்புப் படை, உள்ளூர் காவல்துறை மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இணைந்து செயல்பட்டதன் விளைவாக அச்சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். இந்த வீரமிக்க முயற்சிக்கு மாவட்ட ஆட்சியர் அபிஷேக் ஷர்மா உள்ளிட்ட அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
அமர்நாத் யாத்திரை 2025 - ஆபரேஷன் சிவா
கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிவா' என்ற பெயரில் மீட்புப் பணியில் ஈடுபட்டது. இந்த யாத்திரையின் இரு பாதைகளிலும் 8,500-க்கும் மேற்பட்ட வீரர்களைப் பாதுகாப்புக்காக நிறுத்தியது. யாத்திரையில் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையை நிர்வகித்து, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு உடனடியாக உதவியது. அவசர மருத்துவ சிகிச்சைக்காக 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், இரண்டு நவீன மருத்துவ மையங்கள் மற்றும் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஆகியவற்றை ராணுவம் அமைத்தது. அத்துடன், தடையில்லா தகவல் தொடர்பு, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் வெடிகுண்டுகளைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் குழுக்களையும் ராணுவம் களமிறக்கியது. 25,000 நபர்களுக்கு அவசர ரேஷன்கள், கூடாரங்கள், குடிநீர் வசதிகள், புல்டோசர்கள் மற்றும் அகழ்வாராய்ச்சி இயந்திரங்கள் போன்ற வசதிகளையும் ராணுவம் ஏற்பாடு செய்தது.
‘ஆபரேஷன் சிந்துார்’க்குப் பின் பாகிஸ்தான் குண்டுவீச்சு
ஏப்ரல் 22-ல் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்துார்’ என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களைத் தாக்கியது. இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ராணுவம் ராஜௌரி மாவட்டத்தில் உள்ள நௌஷேரா செக்டாரில் எல்லைப் பகுதியில் கடுமையான குண்டுவீச்சை நடத்தியது. மே 10-ல் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, இந்திய ராணுவத்தின் வெடிகுண்டு செயலிழப்புக் குழுக்கள், வெடிக்காத குண்டுகளை நீக்கி, பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வழி வகுத்தனர். இந்த செயல், எல்லைப் பகுதியில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பில் இந்திய ராணுவத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.