சீருடை அணியாத மாணவியை மாணவர்களின் கழிவறையில் நிற்கவைத்த  ஆசிரியை ஒருவர் தண்டனை அளித்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஆர்.எஸ். கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான கே.டி.ஆர். என்று அழைக்கப்படும் கல்வகுந்தலா ராமா ராவ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் சீருடை அணியாமல் பள்ளிக்கு வந்துள்ளார். இதைக் கண்டித்த, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை அவருக்கு தண்டனையாக மாணவர்களின் கழிவறையில் நிற்கவைத்துள்ளார். இதனால், மனமுடைந்த மாணவி பள்ளிக்கு செல்லமுடியாது என தெரிவித்ததையடுத்து, பெற்றோர்கள் மூலம் இந்த விவகாரம் வெளியே வந்தது.

இது குறித்து அமைச்சர் கே.டி.ஆர். டுவிட்டரில் வெளியிட்ட கருத்தில், “சிறுகுழந்தையை மாணவர்கள் கழிப்பறையில் நிற்கவைத்தது முட்டாள்தனமாது, மனிதநேயமற்றது. இந்த விவகாரத்தை உடனடியாக துணை முதல்வருக்கு கொண்டு சென்று பள்ளி நிர்வாகம், ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், “

நான் பள்ளியில் எனது வகுப்பறைக்கு சென்றபோது, உடற்கல்வி ஆசிரியை என்னை அழைத்தார். ஏன் சீருடை அணியவில்லை எனக்கேட்டார். அதற்கு என் அம்மா துணியை துவைத்துவிட்டார். அதனால், அணியமுடியவில்லை. இது தொடர்பாக மன்னிப்பு கேட்டு எனது தாய் டைரியில் எழுதியுள்ளார் என்று கூறினேன்.

இதை ஏற்க மறுத்த ஆசிரியை என்னை மாணவர்களின் கழிவறையில் சென்று நிற்குமாறு கூறினார். நான் மறுக்கவே, என்னை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று நிற்கவைத்தார். என்னைப் பார்த்து மாணவர்கள் சிரித்தனர். அதன் பி்ன், ஆசிரியை என்னை வகுப்பறைக்கு செல்ல அனுமதித்தார். இதை அனைத்து ஆசிரியர்களிடமும், கூறி ஆசிரியை சிரித்தார். என்னால் மீண்டும் பள்ளிக்கு செல்ல அவமானமாக இருக்கிறது”எனத் தெரிவித்தார்.

இந்த மோசமான செயலில் ஈடுபட்ட ஆசிரியர் மீதும் பள்ளி நிர்வாகம் மீதும் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.