அண்மையில் பாராளுமன்றத்தில் குடியுரிமை மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன. மாணவர் அமைப்புகளும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி போராடி வருகின்றனர். டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்து பலர் தாக்கப்பட்டனர். அதை எதிர்த்து நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடக்கிறது.

உத்திரபிரதேச மாநிலத்திலும் பெரிய வளவில் வன்முறை ஏற்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது வன்முறை வெடித்து கலவரமாக மாறியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். மீரட் பகுதியில் நடந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். வாரணாசியில் கலவரக்காரர்களை போலீசார் விரட்டிச் சென்றனர். அப்போது கூட்டத்தில் அவர்கள் புகுந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிக்கி 8 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

போராட்டக்காரர்களுடன் வன்முறை கும்பல் புகுந்திருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர். அதனால் பொதுமக்கள் யாரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் காவலர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். மத்திய உள்துறை போராட்டங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கலவரக்காரர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.