நாட்டில் மீண்டும், ஆயிரம் ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தெரிவித்தார்.
நாட்டில் கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் நோக்கில் புழக்கத்தில் உள்ள ரூ. 1000, மற்றும் ரூ.500 நோட்டுக்களை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து மக்கள்தங்கள் கைவசம் இருக்கும் செல்லாத ரூபாய் நோட்டுக்களை வங்கியிலும், தபால்நிலையத்திலும் கொடுத்து, மாற்றி வருகின்றனர். இதில் பல்வேறு கட்டுப்பாடுகள் மத்தியஅரசு நாள்தோறும் விதித்து, புதிய விதிமுறைகளை புகுத்தி வருகிறது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி டெல்லியில் நிருபர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ மக்கள் தங்கள் கைவசம் இருக்கும் செல்லாத ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து ரூ. 4500 வரை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டு இருந்தது. பலர் அந்த திட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதால், நாளை முதல், ஒருவர் செல்லாத ரூபாய் நோட்டுகள் மூலம் ரூ. 2000 மட்டும் பெறமுடியும்.
தற்போதுள்ள சூழலில், மத்திய அரசுக்கு மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புதிதாக அச்சடித்து வெளியிடும் எண்ணம் கிடையாது. இப்போதுள்ள நிலையில், ஆயிரம் நோட்டுகள் புதிதாக கொண்டு வரப்படாது.
நாடுமுழுவதும் ஏ.டி.எம்.களில் பிரச்சினை ஏறப்பட்ட நிலையில், ஏறக்குறைய 22 ஆயிரத்து 500 ஏ.டி.எம்.கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு தயாராக இருக்கிறது. இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும்'' எனத் தெரிவித்தார்.
