உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த, அந்த அணியின் கேப்டன் மிதாலி ராஜ்க்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையும், பிளாட் ஒன்றும் பரிசாக வழங்கினார்.

இங்கிலாந்தில் அண்மையில் நடந்த பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்திய மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணிக்கு பரிசுகள் குவிந்து வருகின்றன.

இந்திய கிரிக்கெட் வாரியம் தலா ரூ.50 லட்சம் வழங்கி கவுரவித்தது. தங்கள் துறையில் பணியாற்றும் 10 வீராங்கனைகளுக்கு பதவி உயர்வும், ரூ.13 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது. 

இதே போல் அணியில் அங்கம் வகித்த மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த பூனம் ரவுத், மந்தனா, ஆல்-ரவுண்டர் மோனா மேஷ்ரம் ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் பரிசு வழங்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ஐதராபாத்தில் வசிக்கும் கேப்டன் மிதாலி ராஜ், தெலுங்கானா முதலமைச்சர்  சந்திரசேகர ராவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

அப்போது மிதாலி ராஜ்க்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையும், அடுக்குமாடி குடியிருப்பில் 600 சதுரஅடியில் வீடும் வழங்கப்படும் என்று அறிவித்தார். உலக கோப்பையில் மிதாலியின் ஆட்டம் அற்புதமாக இருந்ததாக பாராட்டிய சந்திரசேகர ராவ், தெலுங்கானாவுக்கும், ஐதராபாத் நகருக்கும் பெருமை சேர்த்து இருப்பதாகவும் பாராட்டினார்.