Asianet News TamilAsianet News Tamil

India@75 Indian Designs : இந்திய சுதந்திர போராட்டமும்..வேலூர் கோட்டையும் !!

வேலூர் கோட்டை என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த கோட்டை, வேலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இது 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியின் போது கட்டப்பட்டது. 

vellore fort history and historical significance of fort
Author
India, First Published May 16, 2022, 4:00 PM IST

இதைக் கட்டியவர் சின்ன பொம்மி நாயக்கர் என்று அழைக்கப்படும் மன்னர் ஆவார். அவரது ஆட்சி காலத்தில் இந்த கோட்டை மிக முக்கிய தலமாகவும், போர்களின் போதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் இந்த கோட்டையை 17ஆம் நூற்றாண்டின் நடுவில் பிஜாப்பூர் சுல்தான் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து 1760 ஆம் ஆண்டு இக்கோட்டை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினரின் வசம் சென்றது. பிஜாப்பூர் மன்னரின் பரிசாக ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இதைப் பெற்றுக் கொண்டதாக தெரிகிறது. பின்னாட்களில் இந்த கோட்டை சிறையாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

vellore fort history and historical significance of fort

திப்பு சுல்தானின் மகன்கள் இங்கு சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஆங்கிலேயர்கள், திப்பு சுல்தானுடன் போர் செய்து வென்ற பிறகு அவருடைய மகன்களை கைது செய்து, இந்த கோட்டையில் தான் சிறை வைத்தனர். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் முக்கிய நிகழ்வான சிப்பாய் கலகம் இங்குதான் நடைபெற்றது. வேலூர் சிப்பாய் கலகம் இந்திய அளவில் பேசப்பட்ட ஒன்று. 1806 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இக்கோட்டையில் இந்திய சிப்பாய்கள் கலகம் நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியை, வேலூர் சிப்பாய் எழுச்சி என்று இந்திய வரலாற்றில் குறிப்பிடுகின்றனர்.

கோட்டைக்குள் நுழைந்ததுமே வடக்கு பக்கம் இந்துக்களுக்காக ஜலகண்டேஸ்வரர் கோயிலும், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தெற்கு புறம் மசூதியும், ஆங்கிலேயர்கள் பிரார்த்தனை செய்ய தென்மேற்கு பகுதியில் சர்ச்சும் கட்டப்பட்டுள்ளது. கோட்டைக்குள் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் 1566 பொம்மு நாயக்கரால் கட்டப்பட்டது. திப்புசுல்தான் வாரிசுகள், குடும்பத்தார், உறவினர்கள் கோட்டைக்குள் தொழுகை நடத்த மசூதி கட்டப்பட்டது. இரண்டாயிரம் பேர் அமர்ந்து ஒரே நேரத்தில் தொழுகை நடத்தலாம்.  ஆங்கிலேயர் ஆட்சியின் போது கோட்டைக்குள் பணியாற்றிய ஆங்கிலேய அதிகாரிகள், அவரது குடும்பத்தார் பிரார்த்தனை செய்ய 1846ல் புனித ஜான் தேவாலயம் கட்டப்பட்டது. 

கோட்டைக்குள் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு திப்புசுல்தான் வாரிசுகள் பயன்படுத்திய நாணயங்கள், கிண்ணங்கள், வாள்கள், வட ஆற்காடு மாவட்டத்தில் கிடைத்த தொல்பொருட்கள், ஓடுகள், மண்பானைகள், கல்வெட்டுகள், செப்பு தகடுகள், கத்திகள், பீங்கன் கிண்ணங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோட்டைக்குள் உள்ள கட்டிடங்கள் திப்பு மகால், ஐதர் மகால், பேகம் மகால், கண்டி மகால், பாதுஷா மகால் என பெயர் வைத்து அழைக்கப்படுகின்றன. இந்த கோட்டை பற்றி 1650ல் ஜாக் டி கோட் என்ற ஐரோப்பிய பயணி, இது போன்ற கோட்டையை நான் எங்கும் பார்த்ததில்லை என வர்ணித்துள்ளார். 

vellore fort history and historical significance of fort

சிப்பாய் கலகம் எனும் முதல் இந்திய சுதந்திர போராட்ட எழுச்சி இந்த வேலூர் கோட்டையில்தான் நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். எனவே தேசிய வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த சுற்றுலா அம்சமாக இந்த வேலூர் கோட்டை வீற்றிருக்கிறது.1806-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ந்தேதி கோட்டைக்குள் நடந்த இந்த சம்பவமே ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முதல் போராக கருதப்படும் சிப்பாய் கலகமாகும். இதுவே இந்திய சுதந்திர போராட்டத்திற்கும் வித்திட்டது. இதன் நினைவாக வேலூர் வடக்குபோலீஸ் நிலையம் அருகே உள்ள மக்கான் சந்திப்பில் சிப்பாய் புரட்சி நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios