Punjab prison rule: சிறைக் கைதிகள் மனைவியுடன் உல்லாசமாக இருக்கலாம்..பஞ்சாப் சிறையில் புதிய திட்டம் அமல்!
Punjab prison rule: சிறையில் உள்ள சில கைதிகள் தங்களைப் பார்க்க வரும், மனைவியுடன் தனி அறையில் நெருக்கமாக இருப்பதற்கு அனுமதி அளிக்கும் சலுகையை பஞ்சாப் அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.
சிறையில் உள்ள கைதிகள் தங்கள் மனைவியுடன் இரண்டு மணி நேரம் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கான வசதியை, கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி பஞ்சாப் அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், சிறைவாசிகள் தங்கள் மனைவியுடன் பாலியல் உறவிலும் ஈடுபட முடியும்.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் தொடர்ச்சியாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக இங்கு, சிறைகளில் உள்ள கைதிகள், தங்கள் மனைவி அல்லது கணவருடன் தனி அறையில் இரண்டு மணி நேரம் செலவிட அனுமதி அளித்துள்ளது.
ஆனால், நீண்ட நாட்களான சிறையில் இருந்த, நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறை வளாகத்தில் உள்ள குளியலறையுடன் கூடிய தனி அறையில் ஒரு கைதி தனது இணையருடன் 2 மணி நேரம் செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கைதிகளின் திருமண பந்தத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய அனுமதியின் மூலம், கைதிகளின் மன அழுத்தம் அதிகரிப்பதோடு, சிறைக் கைதிகளின் நன்னடத்தையும் அதிகரிக்கும். அதோடு, இத்தகைய அனுமதி 3 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். ஆனால், கொடூர குற்றங்களைப் புரிந்தவர்கள், ரவுடிகள், பாலியல் குற்றம் புரிந்தவர்கள் ஆகியோருக்கு இந்த சலுகை வழங்கப்பட மாட்டாது.
அதேபோன்று, ஹெச்.ஐ.வி, கரோனா தொற்று பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும், சிறை கைதியின் துணை திருமண சான்றிதழுடன் சிறைக்கு வர வேண்டும். இதன் மூலம், இந்தியாவிலேயே சிறைக் கைதிகளுக்கு இதுபோன்ற ஒரு சலுகையை அளிக்கும் முதல் மாநிலம் பஞ்சாப் என்பது குறிப்பிடத்தக்கது.