India@75 Indian Designs : தமிழர்களின் சிறப்பை கூறும் தஞ்சை பெரிய கோயில் - ராஜராஜசோழனின் பிரமாண்டம் !

தமிழினத்தின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழ்கிறது, தஞ்சைப் பெருவுடையார் கோயில். பெரியகோயில் என்று அழைக்கப்படும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எழுப்பிய சோழப் பேரரசன் ராஜராஜனின் ஆட்சி, நிர்வாகத் திறன், ராணுவ வலிமை, கலை, கட்டுமானம் என்று அனைத்துக்கும் சாட்சியாக நிற்கிறது. 

Thanjai periya kovil built raja raja chozhan history

சுல்தான்களின் தாக்குதல்கள், மாலிக்குகளின் படையெடுப்புகள், மேலை நாட்டினரின் பீரங்கிகள், இயற்கைச் சீற்றங்களான இடி, மின்னல், நில நடுக்கம் ஆகியவற்றைக் கடந்து 1000 ஆண்டுகளுக்கும் மேல் கம்பீரமாக நிற்கும் பெருவுடையார் கோவில். தஞ்சைப் பெரியகோயில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, கி.பி 1010ல் ராஜராஜனால் குடமுழுக்கு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு 1729, 1843 ஆகிய ஆண்டுகளில் தஞ்சை மராத்திய மன்னர்களால் குடமுழுக்கு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். 

தஞ்சைப் பெரிய கோவில், ஏராளமான அற்புதங்களைத் தன்னுள்ளே பொதிந்துவைத்திருக்கிறது. புவி அச்சின் சாய்வுகளைக் கணித்து, மிக நுட்பமாக அடித்தளத்தை அமைத்து, இருகாற்படை நுட்பத்தில் தொடங்கி, கனமில்லாத ஒற்றைக்கல்லால் கோபுரத்தை வடிவமைத்து நிறுத்தியிருக்கிறார்கள் சோழச் சிற்பிகள். புவியின் சுழற்சிக்கேற்ப தன்னைத்தானே தகவமைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இக்கோவிலின் கட்டுமான நுட்பம் உலக வல்லுநர்களை எல்லாம் விழியுயர்த்தி வியக்கவைக்கிறது. ஒவ்வொரு கல்லிலும் கலைநயம். ஒவ்வொரு சிற்பத்திலும் ஓராயிரம் கதைகள். வழிபாட்டுக்குரிய ஆலயமாக மட்டும் அல்லாமல், வங்கியாக, கலைக்கூடமாக, சமூக நிர்வாகத்துக்கான ஒருங்குகூடு மையமாக விளங்கியிருக்கிறது இந்தப் பெரிய கோவில். 

Thanjai periya kovil built raja raja chozhan history

தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டியது யார் என்பது பற்றி நெடுங்காலம் சர்ச்சைகள் இருந்தன. தஞ்சையை ஆண்ட கரிகாலன் தீரா நோயால் தவித்ததாகவும், இந்தப் பெரிய கோவிலைக் கட்டி இங்குள்ள சிவகங்கைத் தீர்த்தத்தில் மூழ்கியெழுந்ததால் நோய் தீர்ந்ததென்றும், பிரகதீஸ்வர மகாத்மியம் என்ற நூல் சொல்கிறது. கிருமி கண்ட சோழன் என்ற கரிகாலனின் பட்டப் பெயரை இதற்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டியது அந்த நூல். ஆராய்ச்சியாளர் ஜி.யு.போப், காடுவெட்டிச் சோழன் என்பவனே பெரிய கோவிலைக் கட்டினான் என்று என்று எழுதினார். 1886-ம் ஆண்டில், ஹீல்ஷ் என்ற ஜெர்மானிய அறிஞர் இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வுசெய்யும் பணியில் இறங்கினார். 

6 ஆண்டுகால தீவிர உழைப்பில் கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆராய்ந்த ஹீல்ஷ், பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம் என்ற வரியை முன்வைத்து, பெரிய கோவிலைக் கட்டியவன் ராஜராஜ சோழனே என்று உறுதிசெய்தார். பெரிய கோவிலின் விமானம் மிகத் திறமையான தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுக்கான் பாறை நிலப்பரப்பில் 350 அடிக்குத் தொட்டி போன்ற பகுதியை உருவாக்கியிருக்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்த காட்டாறுகளில் இருந்து மணலைக் கொண்டு அத்தொட்டியில் கொட்டியிருக்கிறார்கள். 

அதன் மேல் மரக்கால் வடிவில் அடித்தளம் அமைத்து கனமான கல் பொருத்தி தரைமட்டத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதுவரை ஒற்றைச் சுவராகக் கொண்டு வந்து தரைக்கு மேலே இரட்டைச் சுவராகக் கொண்டுபோய் கோபுரமாக உயர்த்தியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையின் வடிவத்தில் இருக்கிறது விமானக் கட்டுமானம். இதற்குப் பெயர், டைனமிக் ஆர்க்கிடெக்சர். இதன் சிறப்பு என்னவென்றால், பூமியின் ஆட்டத்துக்கேற்றவாறு கோபுரமும் அசைந்து தன்னைத் தகவமைத்துக்கொள்ளும். அதனால்தான் எல்லா இயற்கைச் சீற்றங்களையும் தாக்குப்பிடித்து நிற்கிறது. ராஜராஜன் வாயிலுக்கு எதிரே உள்ள 16 கால்மண்டபத்தில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட மிகப்பெரிய நந்தி உள்ளது. 

இந்த நந்தி கி.பி. 16-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் காலத்தில் நாயக்க மன்னர்களால் உருவாக்கபட்டதாகும். இந்த மண்டபத்துக்கு தென்புறம் திருச்சுற்று மாளிகையில் வடதிசை நோக்கியவாறு காணப்படும் நந்தியே ராஜராஜன் காலத்தில் கோவிலுக்காக வடிக்கபட்டது. தஞ்சை பெரிய கோவிலில் இருக்கும் நந்தியின் சிலை இந்திய கோவில்களில் இருக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றாகும். கப்பில் உள்ள ஐந்து தளங்களைக் கொண்ட கேரளாந்தகன் திருவாயிலில் முதல்தளம் தவிர, மற்றவை செங்கற்களால் கட்டப்பட்டவை. இந்தச் செங்கற்கள் சிறப்பான தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை. 

Thanjai periya kovil built raja raja chozhan history

அடப்பமரம், மாமரம், கடுக்காய் மரம், தாணிக்காய் மரம் ஆகியவற்றின் பட்டைகளையும், திரிபலா எனப்படும் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றையும் கஷாயமாக்கி, மண்ணில் ஊற்றி, ஐந்து மாதங்கள் புளிக்கப் புளிக்கப் பிசைந்து, செங்கலாக அறுத்து, சுட்டு, ஒரு மாதம் ஆறவிட்டு, தண்ணீரில் ஊறவிட்டு, நன்கு உலரச்செய்து அதன் பிறகே கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாலிக்குகளும், நவாப்களும், சுல்தான்களும் பலமுறை தஞ்சை பெரிய கோவிலைச் சூறையாடினர். பிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயரும் பீரங்கிகளைவைத்துத் தகர்த்தனர். 30 ஆண்டுகளுக்கும் மேல் சிப்பாய்களின் கூடாரமாக இருந்த பெரிய கோவில் பல தாக்குதல்களைச் சந்தித்தது. இருந்தும் அதன் கம்பீரத்தை யாராலும் சிதைக்க இயலவில்லை. அதனால்தான் அது இன்றும் பெரிய கோவிலாக இருக்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios