நுண்கிருமிகள் பற்களை கெடுத்து விடாவண்ணம் பற்களுக்கே அரணாக இருக்க கூடிய ஈறுகளை சீராக பாதுகாக்காவிட்டால் பற்கள் கொஞ்ச கொஞ்சமாக ஆட்டம் காண ஆரம்பித்துவிடும்.
பற்களை விட பல் ஈறுகளில் கிருமித்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆகவே பற்களை பாதுகாப்பது போல் பல் ஈறுகளையும் பாதுகாக்க வேண்டும்.
ஈறு பாதிப்பின் காரணங்கள்…
இனிப்பு பண்டங்களை அதிகம் உண்ணுதல், அமிலம் மற்றும் காரத்தன்மையுள்ள பொருட்களை அதிகம் உட்கொண்டு வாயை சுத்தம் செய்யாமல் இருத்தல்,
நாட்பட்ட வயிற்றுப் புண்கள், தொண்டை சதை வளர்ச்சி, சைனஸ் நோய், அதைத் தொடர்ந்த குறட்டை, சீரற்ற பல்லமைப்பு, ஸ்டீராய்டு மருந்துகள், பாதரசம், தாமிரம், துத்தநாகம் போன்ற உலோகத்தால் செய்யப்பட்ட மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்ளுதல்,
வேதிப் பொருட்களால் செய்யப்பட்ட துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானம் மற்றும் தீவிரகிருமித் தொற்று போன்றவற்றால் பல் ஈறு பாதிக்கப்படுகிறது.
பல் ஈறு பாதிப்பதின் அறிகுறிகள்…
பல்லில் வலி, ஈறு பகுதிகளில் வீக்கம் அல்லது கரைவு, வாய் துர்நாற்றம், ஈறில் ரத்தக்கசிவு, பல்லாட்டம் மற்றும் உணவு உட்கொள்ளும் போது வாயில் எரிச்சல் மற்றும் வலி போன்ற தொல்லைகள் தோன்றுகின்றன.
பாதுகாக்க வழிகள்…
அன்றாடம் பல் துலக்கியப் பின்பு நல்லெண்ணெய் கலக்கிய நீரால் வாய் கொப்பளிப்பது ஈறை பலப்படுத்தும், ஆனால் இவற்றை விட எளிதில் கிடைக்கக்கூடிய கத்தரிக்காய்தான் ஈறுகளை காப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
சொலனம் மெலோன்ஜினா என்ற தாவரவியல் பெயர் கொண்ட சோலனேசியே குடும்பத்தைச் சார்ந்த கத்தரி செடிகள் இந்தியாவிற்கு சொந்தமானவை.
இதிலுள்ள வேதிப்பொருட்கள் ரத்தத்திலுள்ள கோலின் எஸ்ட்ரேஸ் என்னும் பொருளை கட்டுப்படுத்தும் தன்மையுடையதாகவும். ரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும் இருக்கிறது.
பழத்திலுள்ள சொலசோடின், கேம்பிஸ்டீரால், பீட்டா சைட்டோஸ்டீரால், யுரோஸ்லிக் அமிலம், சோலாமார்கின் போன்ற பொருட்கள் சதை செல் அழிவை கட்டுப்படுத்துகின்றன.
வெம்பிய முழு கத்தரிப் பழத்தை பல இடங்களில் ஊசியால் நன்கு குத்தி நல்லெண்ணெய் விட்டு வறுக்க வேண்டும். இதனை பிழிந்து எண்ணெயை வடித்து, ஈறு கரைந்துள்ள இடங்களில் தடவ ஈறு இறுகும்.
பழத்தை இளஞ்சூட்டுடன் மென்று வாய் ஈறில் வைத்து அடக்கி வர ஈறு பலப்படும்.
வெம்பிய கத்தரிப்பழங்களை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெயால் வாய் கொப்புளித்து வர (ஆயில் புல்லிங்) பற்கள் மற்றும் ஈறுகள் வலுவடையும்.
