Asianet News TamilAsianet News Tamil

ஏப்பம் எதனால் வருகிறது?

why burp-is-coming
Author
First Published Dec 8, 2016, 1:37 PM IST


ஏப்பம் வெளிப்படுதல் என்பது செரிமானத்தின் அறிகுறியாக நம்பப்படுகிறது. அதே வேளையில், பொது இடங்களில், இயல்பை மீறி அளவு கடந்த ஏப்பம் வெளிப்படுவது அநாகரிக செயலாகவே அடையாளம் காணப்படுகிறது.

 

ஏப்பம் எதனால் வருகிறது? அது செரிமானத்தின் அடையாளமா? ஏப்பத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? போன்ற கேள்விகளுக்கான விடையை கீழே பார்க்கலாம்.

 

‘‘நாம் உணவு சாப்பிடும்போதும், தாகத்தைத் தணிப்பதற்காக தண்ணீர் அருந்தும்போதும், சிகரெட் பிடிக்கும்போதும், மூச்சை இழுக்கும்போதும் ஏராளமான காற்று நமது வயிற்றினுள் செல்கிறது.

 

இவ்வாறு வயிற்றில் செல்லும் காற்றுதான் பின்னர் ஏப்பமாக வெளிப்படுகிறது. நிறைய காற்று வயிற்றினுள் சேர்வது ஒருவருக்கு வயிறு பெரிதாதல், குறைந்த அளவு உணவு உட்கொண்டாலும் வயிறு நிறைந்து காணப்படுதல் போன்ற பலவித பிரச்சனைகளை உண்டாக்கும். பெருங்குடல் மற்றும் சிறுகுடலில் உண்டாகும் வாயுவை ஏப்பமாக நம்மால் வெளியேற்ற முடியாது.

 

அதிக அளவில் உணவு உட்கொள்ளும்போது, நமக்குத் தெரியாமலே அதிக அளவு காற்று வயிற்றில் சேர்கிறது. அவ்வாறு சேரும் காற்று ஓரிரு முறை ஏப்பமாக வெளிப்படலாம். அவ்வாறு வெளிப்படுவதனால், உடலில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது. ஒரு சிலர் தங்களை அறியாமலே ஏராளமான காற்றை விழுங்கிவிடுவார்கள்.

 

பின்னர் தொடர்ச்சியாக, 20 - 30 தடவைகளுக்கு மேல் ஏப்பம் விட்டுக்கொண்டிருப்பார்கள். நம்மில் பலர் ஏப்பம் வெளிப்படுதல் சாப்பிட்ட உணவுகள் செரிமானம் ஆனதற்கான அடையாளம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஏப்பம் வெளிப்படுவதற்கும் நம்முடைய செரிமான சக்திக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது!

 

ஏப்பம் வெளிப்படுவதை நம்மால் கட்டுப்படுத்த முடியும். எண்ணெயில் பல தடவை பொரிக்கப்பட்ட பூரி, வடை போன்ற சிற்றுண்டி வகைகள், எண்ணெயில் நன்றாக வறுத்தெடுக்கப்படும் மீன், கோழி போன்ற அசைவ உணவு வகைகள் போன்றவற்றை அடிக்கடி ஏராளமாகச் சாப்பிடுபவர்களுக்கு ஏப்பம் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். எண்ணெய் உணவுப் பண்டங்களைக் குறைப்பது, காற்றை விழுங்குவதைத் தவிர்ப்பது போன்றவை மூலம் பெருமளவு ஏப்பம் வெளிப்படுவதை கட்டுப்படுத்த முடியும்.

 

அப்படியும் ஏப்பம் தொடர்ச்சியாக வெளிப்படுவது குறையவில்லையென்றால், உடனடியாக மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், ஏப்பத்துடன் ஆசிடும் சேர்ந்து வெளியாகும். இதனால், நெஞ்சுப்புண் உண்டாகும். பொது இடங்களில் தொடர்ந்து அதிக சத்தத்துடன் ஏப்பம் விடுதல் பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்தும்!’’

Follow Us:
Download App:
  • android
  • ios