இறுக்கமாக உள்ளாடை அணிவதால் ஏற்படும் அடுக்கடுக்கான பாதிப்புகள்- பெண்களே உஷார்..!
பெண்கள் தங்களை மிகவும் பொருத்தமாகவும், கவர்ச்சியாகவும் காட்டிக்கொள்ள இறுக்கமான உள்ளாடைகளை பல நேரங்களில் அணிவதை பார்க்க முடிகிறது. ஆனால் இதனால் பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படக்கூடும் என மருத்துவ உலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எந்த பண்டிகையாக இருந்தாலும் சரி, வேறு ஏதாவது முக்கிய நிகழ்வு என்றாலும் சரி, பெண்கள் மிகவும் ஃபேஷனாக இருக்க விரும்புவார்கள். என்ன அணிய வேண்டும் என்பதில் தொடங்கி, தங்களுடைய வடிவம் எப்படியிருக்க வேண்டும் என்பது வரை மிகவும் துல்லியமாக திட்டமிடுவார்கள். அதனால் வெளிப்புற உடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போன்றே, உள்ளாடைகளையும் தேர்வு செய்து வாங்குவர். தற்போதைய மார்டன் அல்லத் செமி மார்டன் உடைகள் பல மிகவும் இறுக்கமாக வருகிறது. அதனால் உள்ளாடைகளை தேர்வு செய்யும் போது, அவற்றையும் பெண்கள் இறுக்கமாகவே வாங்கிவிடுகின்றனர். தொடர்ந்து இறுக்கமான ஆடைகள் அணிவதால், எதிர்காலத்தில் பெண்கள் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்று மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. குறிப்பாக பெண்களின் மார்புப் பகுதி இறுக்கமான உள்ளாடையால் சீக்கரமே பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
பல முறை தங்களை மிகவும் பொருத்தமாகவும் கவர்ச்சியாகவும் காட்டிக்கொள்ள, பெண்கள் இறுக்கமான மற்றும் சிறிய கப் ப்ராக்களை வாங்குகிறார்கள். இது அசவுகரியமாக மட்டுமில்லாமல், பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதனால், முதுகு வலி, மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகளை அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரிப்பு மற்றும் எரிச்சல்
இறுக்கமான ப்ரா அணிவதால் காற்று உட்புகுவது தடுக்கப்படுகிறது. இதனால் உடலில் தடிப்புகள் ஏற்படுகின்றன. அதையடுத்து தடித்த பகுதிகளில் அரிப்பு துவங்கி, சருமத்தின் மேற்பரப்பிலும் எரிச்சலை உண்டாக்கும். இதனால் தொற்று நோய் அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இறுக்கமான ப்ரா உங்களை மேலும் சிக்கலில் சிக்க வைக்கும் என்பதை கவனத்தில்கொள்ளுங்கள்.
அமிலத்தன்மை
இறுக்கமான ப்ரா அணியும் போது, அது சருமத்திற்கு மட்டும் பிரச்சனையாக மாறாமல் உடல் உறுப்புகளையும் பாதிக்கிறது. ப்ராவின் கீழ் பட்டா பெரும்பாலும் நுரையீரலின் அடிப்பகுதியில் தான் இருக்கும். அதனால் இறுக்கமான ப்ராக்கள் அப்பகுதியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக, வயிற்றில் உருவாகும் அமிலம் மேலே வருகிறது. அதனால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல், வாய் புளிப்பது போன்ற பிரச்னைகள் வரக்கூடும்.
உங்களுடைய துணை தூக்கத்தில் உடலுறவு கொள்கிறாரா? அப்போது இந்த பாதிப்பாக இருக்கலாம்..
மார்பு வலி
ஃபிட்டிங் மற்றும் சிறிய அளவிலான பிராக்களை அணிவது மார்பக பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பெரிய மார்பகம் கொண்டவர்களுக்கு இந்த பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம். அதற்கு காரணம், பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள், தங்கள் அளவு மற்றும் வடிவத்தை பராமரிக்க சிறிய அளவிலான பிரா அணிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் அவர்களுக்கு சீக்கரமாகவே முதுகுவலி போன்ற பிரச்னை வந்துவிடுகிறது. அதுமட்டுமின்றி, மிகவும் இறுக்கமான பிரா அணிவதும் ரத்த ஓட்டத்தை பாதிக்கும்.
வடிவம் மாறிவிடும்
மார்பகங்களை உயர்த்துவதற்கும், அதற்கு ஒரு பிடிமானத்தை வழங்குவதற்கும் தான் ப்ரா வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை ஃபேஷனுக்கு ஏற்றவாறு தவறான கண்ணோட்டத்துடன் அணுகினால், மார்பக வளர்ச்சி மாறுபடலாம். அதனால் உங்களுடைய மார்பழகு பெரிதும் பாதிக்கப்படலாம். எனவே இறுக்கமான பிரா அணிவது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது மட்டுமல்ல அழகையும் கெடுத்துவிடும் என்பதில் கவனமாக இருங்கள்.