முட்டிகள், தொடைப் பகுதி, கால் வலியால் அவதிப்படுபவர்கள் இந்த அர்த்த உட்கடாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

அர்த்த உட்கடாசனம் செய்முறை:

இரு கால்களையும் ஒன்றாக வைத்து நிற்கவும். கண்கள் திறந்தபடி, கைகள் உடலை ஒட்டிய நிலையில் இயல்பாக இருக்கட்டும். இந்த நிலையில் இருந்து மூச்சை உள்ளிழுத்தபடியே இரு கைகளையும் முன்புறமாக மேலே கொண்டுசெல்லவும். தலைக்கு மேல் கைகள் நேராக இருக்க வேண்டும்.

ஓரிரு விநாடிகளுக்குப் பின், மூச்சை வெளியே விட்டபடி, முட்டியை மடித்து, மேல் உடலை முன்புறமாகக் கொண்டுசெல்லவும். ஓரிரு விநாடிகளுக்குப் பின், மூச்சை உள்ளிழுத்தபடியே இரு கைகளையும் மேல்புறமாக நகர்த்தி முதுகெலும்பை, பின்னால் நன்றாக வளைக்க வேண்டும். இந்த நிலையில் தொடைகள் தரைக்குச் சமமாக இருக்கும். பார்வை நேராக இருக்கும்.

பலன்கள்:

கணுக்கால்கள், முட்டிகள், தொடைப் பகுதிகள் வலுவாகும். கீழ் முதுகு நன்கு பலம்பெறும். தோள்பட்டைத் தசைகள் நன்கு விரிவடையும்.