உடலுக்கு வலுவையும், உற்சாகத்தையும் தருவது உயிர்ச்சத்துக்களான வைட்டமின்கள்தான். இந்த உயிர்ச் சத்துக்களானது உடலுக்கு அவசியத் தேவையாகும். வைட்டமின் உயிர்ச்சத்துக்கள் சரிவிகிதத்தில் உடலில் சேர்ந்தால்தான் உடல் நோய் நொடிகளின் தாக்குதலிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக இருக்க முடியும்.
வைட்டமின்களின் வகைகள் பற்றியும், அவை உடலின் வளர்ச்சிக்கு எவ்வாறு செயலாற்றுகிறது என்பது பற்றியும், எவற்றில் எந்த வைட்டமின் உள்ளது என்பதையும் நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம்.
வைட்டமின் - சி (Ascorbic acid) என்ற உயிர்சத்து பற்றி தெரிந்துகொள்வோம்.
உயிர்ச்சத்தான வைட்டமின் - சி மனித உடலில் வளர்ச்சி உண்டாக்கக் கூடிய சத்து உருவாக இன்றியமையாத பங்கு வகிக்கிறது. இந்த எலும்புகள், தசை நார்கள், இரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ‘இ’ நீரில் கரையும் தன்மையுடையதாகும். காய்கள், கனிகளின் மேல் தோலில் அதிகம் நிறைந்துள்ளதால் இவை காயும் போது இந்த வைட்டமின் ‘இ’ சத்து காற்றில் கலந்து விடுகிறது. மேலும் சிறிது சிறிதாக நறுக்கும்போது இந்த உயிர்ச்சத்துக்கள் வெகுவாக அழிந்து விடுகின்றன.
இவை உடலுக்கு உணவின் மூலமே கிடைக்கிறது. இந்த வைட்டமின் ‘இ’ உடலில் சேமித்து வைக்கப் படுவதில்லை. தேவைக்கு அதிகமானால் அவை சிறுநீரின் வழியாக வெளியேறிவிடும். இதனால் இந்த உயிர்ச்சத்து தினமும் உடலுக்குத் தேவைப்படுகிறது. இந்த தேவை உணவின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது. வைட்டமின் ‘இ’ சத்தானது உடலில் குறைந்தால் ஸ்கர்வி (Scurvy) என்ற நோய் ஏற்படுகிறது.
வைட்டமின் - சி யும் உடல் வளர்ச்சியும்
• இந்த வைட்டமின் - சி உடலின் எந்தப் பகுதி செல்களில் பாதிப்பு ஏற்பட்டாலும், அவற்றை சீர் செய்து உடலை நன்கு செயல்படவைக்கிறது. செல்களின் வளர்ச்சியே உடல் வளர்ச்சிக்கு ஆதாரமாகும்.
• இந்த வைட்டமின் - சி இரத்தத்தை சுத்தப்படுத்தி சீராக இயங்கச் செய்கிறது.
• தோல், பல்லீறுகள், பற்கள், எலும்புகள் போன்றவற்றிற்கு உறுதியளிக்கிறது.
• உடம்பில் உண்டான காயங்களை மிக விரைவில் ஆற்றுவதற்கு இந்த சத்து மிகவும் தேவைப்படுகிறது.
